குடிசை மாற்றுவாரியம் வீடு ஒதுக்க 76 ஆயிரம் கட்டணம்: வேலம்மாள் பாட்டிக்காக பணம் கொடுத்த திமுக நிர்வாகி!

குடிசை மாற்றுவாரியம் வீடு ஒதுக்க 76 ஆயிரம் கட்டணம்: வேலம்மாள் பாட்டிக்காக பணம் கொடுத்த திமுக நிர்வாகி!

ஒரே புன்னகையால் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை போய்ச் சேர்ந்தவர் வேலம்மாள் பாட்டி. இவருக்கு அரசு சார்பில் வீடு ஒதுக்கப்பட்டது. இவ்வீட்டிற்கான அரசு நிர்ணயித்திருக்கும் குறைந்தபட்சக் கட்டணத்தை திமுக நிர்வாகி ஒருவரே தன் சொந்தப் பணத்தில் இருந்து கட்டியிருக்கும் சுவாரஸ்யத் தகவல் இப்போது வெளியாகி உள்ளது.

நாகர்கோவில் மாநகராட்சியின் புகைப்படக் கலைஞராக இருந்தவர் ஜாக்சன் ஹெர்பி. இவர் அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு போய்ச்சேரும் வகையில் தனித்திறன்மிக்க புகைப்படங்களாக எடுப்பது ஜாக்சன் ஹெர்பியின் வழக்கம்.

அந்தவகையில், தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு, 2000 ரூபாய் பணத்தை வாங்கிவிட்டு மலர்ந்த முகத்துடன் சென்ற வேலம்மாள் என்னும் பாட்டியை ஜாக்சன் ஹெர்பி எடுத்த படம் வைரல் ஆனது. இதன் மூலம் வேலம்மாள் பாட்டியும் பேமஸ் ஆனார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினே இந்தப் புகைப்படத்தை இந்த ஏழைத்தாயின் சிரிப்பே... நம் ஆட்சியின் சிறப்பு எனத் தன் சோசியல் மீடியா பக்கங்களில் பதிவு செய்தார்.

அண்மையில் மழைபாதிப்பினைப் பார்வையிட குமரிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த வேலம்மாள் பாட்டி, தான் வீடு இல்லாமல் கஷ்டப்படுவதாகத் தெரிவித்தார். அப்போதுகூட நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் வேலம்மாள் பாட்டிக்கு ஒரு சேர் போடப்பட்டிருந்தது. வயோதிகத்தால் அதில் அமர்ந்திருந்தபடியே வேலம்மாள் பாட்டி பேச, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரிடம் குனிந்தபடியே நின்றுகொண்டே பேசினார்.

பாட்டியுடன் திமுக நிர்வாகி பூதலிங்கம் பிள்ளை
பாட்டியுடன் திமுக நிர்வாகி பூதலிங்கம் பிள்ளை

அப்போதே வேலம்மாள் பாட்டி தனக்கு வீடு வேண்டும். முதியோர் உதவித்தொகை வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். இதில் முதியோர் பென்சன் உடனே வழங்கப்பட்டது. இந்நிலையில் இப்போது வீடும் வழங்கப்பட்டது. குமரி மாவட்டம், பால்குளம் அருகில் குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்தக் குடியிருப்பில் தான், பாட்டிக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக குடிசைமாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கும்போது, ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுத்து ஒதுக்கப்படும். அதேநேரத்தில் அதற்கென மிகக் குறைவான ஒரு தொகை நிர்ணயம் செய்யப்படும். அந்தவகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலம்மாள் பாட்டிக்கு ஒதுக்கிய இல்லத்திற்கு 76 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

பாட்டியின் ஏழ்மை நிலையை நன்கு உணர்ந்திருந்த குமரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளரும், தோவாளை ஒன்றியக் கவுன்சிலருமான பூதலிங்கம் பிள்ளை தன் சொந்தப் பணத்தில் இருந்து 76 ஆயிரம் ரூபாயை பாட்டியின் இல்லத்திற்காகக் கட்டியுள்ளார். முகம் ததும்ப புன்னகையோடு, அவரும் பாட்டிக்கு இல்லம் ஒதுக்கப்பட்டதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சியிலும் உடன் இருந்தார். இச்சம்பவம் பாட்டியை மட்டுமல்ல, குமரி மக்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in