நான்காம் கட்டத் தேர்தல்... 67 சதவீத வாக்குகள் பதிவு!

வாக்களிக்க வந்த மக்கள்
வாக்களிக்க வந்த மக்கள்

நேற்று நடைபெற்று முடிந்த நான்காம் கட்ட மக்களவை தேர்தலில்  67 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடந்து வருகிறது. முதல் கட்ட தேர்தலில் 102 தொகுதிகளுக்கும், 2ம் கட்ட தேர்தலில் 88 தொகுதிகளுக்கும், 3ம் கட்ட தேர்தலில் 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், 4ம் கட்டமாக 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நேற்று நடந்தது. 

மாலை 6 மணியுடன் முடிவடைந்த வாக்குப்பதிவில் சுமார்  67 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முதல் 3 கட்ட தேர்தலில் முறையே 66.14%, 66.71% மற்றும் 65.68% வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. நேற்றைய 4ம் கட்ட தேர்தலில் 1717 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

வாக்களிக்க காத்திருக்கும் மக்கள்
வாக்களிக்க காத்திருக்கும் மக்கள்

முதல் கட்டத் தேர்தலில் 102 தொகுதிகள், 2ம் கட்ட தேர்தலில் 88 தொகுதிகள், 3ம் கட்ட தேர்தலில் 93 தொகுதிகள் மற்றும் நேற்றைய 4ம் கட்ட தேர்தலில் 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனால் அங்கு வாக்குப்பதிவு நடக்கவில்லை. எனவே 4 கட்ட தேர்தல் முடிவில் இதுவரை 379 தொகுதிகளில் தேர்தல் முடிந்து விட்டது. 

இனி எஞ்சியிருப்பது 164 தொகுதிகள் மட்டுமே. இவற்றில்  எதிர்வரும் 20 ம் தேதி நடைபெறும்  5 ம் கட்ட தேர்தலில் 49 தொகுதிகளிலும், வரும் 25 ம் தேதி நடைபெறும்  6 ம் கட்ட தேர்தலில் 58 தொகுதிகளிலும்  ஜூன் 1 ம் தேதி நடைபெறும்  7 வது மற்றும் இறுதி கட்ட தேர்தலில் 57 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஆந்திரம் மற்றும் ஒடிசாவில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. ஆந்திர பிரதேசத்தில் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 68.20% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஒடிசாவில் 28 தொகுதிகளில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 64.23 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in