காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழப்பு: புகார் கூறப்பட்ட இருமல் மருந்துகளுக்கு மத்திய அமைச்சர் குட் சர்ட்டிபிகேட்

காம்பியாவில் 66 குழந்தைகள்  உயிரிழப்பு:  புகார் கூறப்பட்ட இருமல் மருந்துகளுக்கு மத்திய அமைச்சர் குட் சர்ட்டிபிகேட்

காம்பியாவில் 66 குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணமென சந்தேகிக்கப்பட்ட இருமல் மருந்துகள் தரமானவை என மத்திய இணை அமைச்சர் பக்வந்த் குபா எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் திடீர் என உயிரிழந்தன. இதையடுத்து, இந்தியாவில் உள்ள ஹரியாணாவைச் சேர்ந்த மருந்து நிறுவனம் தயாரித்த நான்கு இருமல் சிரப்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், “ இந்தியாவில் தயாரான நான்கு சளி மற்றும் இருமல் சிரப்கள் கடுமையான சிறுநீரக காயங்கள் மற்றும் காம்பியா குழந்தைகளின் 66 இறப்புகளுடன் தொடர்புடையவை" என்று குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அத்துடன் ப்ரோமெதாசின் வாய்வழி மருந்து (Promethazine Oral Solution), கோஃபெக்ஸ்மாலின் குழந்தை இருமல் சிரப் (Kofexmalin Baby Cough Syrup), மாகோஃப் பேபி காஃப் சிரப் (Makoff Baby Cough Syrup) மற்றும் மேக்ரிப் என் கோல்ட் சிரப் ( Magrip N Cold Syrup) ஆகிய இந்த நான்கு சிரப்களை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது. மேலும், இந்த மருந்துகள் ஏற்கெனவே விநியோகிக்கப்பட்டிருந்தாலும் அதனைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.

ஆனால், காம்பியாவில் 66 குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணமென சந்தேகிக்கப்படும் மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்து ஏற்றுமதி செய்த நான்கு இருமல் மருந்துகளும் தரமானதாக இருப்பதாக மத்திய அரசு திடீரென அறிவித்துள்ளது. இது தொடர்பாக நடந்த ஆய்வக சோதனைகளில் கலப்படம் எதுவும் இல்லை என ரசாயனங்கள் மற்றும் உரங்களுக்கான இணை அமைச்சர் பக்வந்த் குபா, மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

சண்டிகரில் உள்ள பிராந்திய மருந்து பரிசோதனை ஆய்வகத்தால் நான்கு இருமல் சிரப்களின் கட்டுப்பாட்டு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். ப்ரோமெதாசின் வாய்வழி மருந்து, கோஃபெக்ஸ்மாலின் குழந்தை இருமல் சிரப், மேக்ரிப் என் கோல்ட் சிரப், மாகோஃப் பேபி காஃப் சிரப் ஆகியவற்றின் மாதிரிகளில் டைதிலீன் கிளைகோல் (DEG) மற்றும் எத்திலீன் கிளைக்கால் (EG) ஆகியவற்றின் இருப்பு ஆய்வு செய்யப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in