‘56 அங்குல கோழைத்தனம்’ - மோடியை விமர்சிக்கும் ஜிக்னேஷ் மேவானி!

‘56 அங்குல கோழைத்தனம்’ - மோடியை விமர்சிக்கும் ஜிக்னேஷ் மேவானி!

பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் செய்ததாக அசாம் சமீபத்தில் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு ஜாமீன் பெற்ற குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி, பெண் காவலரைத் தாக்கியதாகத் தொடரப்பட்ட இரண்டாவது வழக்கிலும் ஜாமீன் பெற்றார். இந்நிலையில், இந்த வழக்குகள் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தனது பிம்பத்தைச் சிதைக்கும் நோக்கில் நடந்த சதி என்றும், அதன் பின்னணியில் பிரதமர் அலுவலகம் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

நாதுராம் கோட்சேவை பிரதமர் மோடி கடவுளாகக் கருதி வழிபடுகிறார் என ஜிக்னேஷ் மேவானி ட்வீட் செய்ததாக அசாம் பாஜகவைச் சேர்ந்த அரூப் குமார் தே புகார் அளித்திருந்தார். அதன் பேரில் பாலன்பூரில் உள்ள சர்க்யூட் ஹவுஸில் தங்கியிருந்த ஜிக்னேஷ் மேவானியை ஏப்ரல் 20 இரவு 11.30 மணிக்கு அசாம் போலீஸார் கைதுசெய்தனர். அகமதாபாத் கொண்டுசெல்லப்பட்ட அவர், அங்கிருந்து விமானம் மூலம் அசாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அந்த வழக்கில் அவருக்கு ஏப்ரல் 25-ல் கோக்ரஜார் நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில், உடனடியாக இன்னொரு வழக்கில் அவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டார். போலீஸாரைத் தாக்கியதாக அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டதாக அதற்குக் காரணம் சொல்லப்பட்டது. குவாஹாட்டி விமான நிலையத்திலிருந்து கோக்ரஜாருக்கு அழைத்துச் சென்றபோது, பெண் காவலரை கார் இருக்கையின் மீது தள்ளிவிட்டதாகவும் முரட்டுத்தனமாக சைகை செய்ததாகவும், அவதூறாகப் பேசியதாகவும் அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டதாக அசாம் போலீஸார் தெரிவித்தனர். கோக்ரஜார் செல்லும் வழியில் உள்ள பர்பேட்டா சாலை காவல் நிலையத்தில் ஏப்ரல் 21-ம் தேதி இது குறித்து வழக்கு பதிவுசெய்யப்பட்டதாகவும் கூறினர்.

ஏப்ரல் 29-ல் இவ்வழக்கில் அவரது ஜாமீன் மனுவை விசாரித்த பர்பேட்டா நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி அபரேஷ் சக்கரவர்த்தி, கஷ்டப்பட்டு உழைத்து பெற்ற ஜனநாயகத்தை, ஒரு போலீஸ் அரசாக மாற்றுவது என்பது நினைத்துப்பார்க்கவே முடியாதது என விமர்சித்ததுடன், குற்றம்சாட்டப்பட்ட நபரைக் கைதுசெய்யச் செல்லும் சமயத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிய அசாம் போலீஸாரின் சீருடையில் ‘உடல் கேமரா’ பொருத்தப்பட வேண்டும் என்றும், அவர்களது வாகனங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உத்தரவிட வேண்டும் என்றும் குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

இவ்வழக்கில் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டிருந்த தகவல்களுக்கு மாறாக, மாஜிஸ்திரேட் முன்னிலையில் அந்தப் பெண் காவலர் வாக்குமூலம் அளித்ததைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், ஜிக்னேஷ் மேவானியை நீண்ட காலத்துக்குச் சிறையில் அடைத்துவைப்பதற்காகவே அந்த வழக்கு அவசரகதியில் பதிவுசெய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டது.

இந்நிலையில், இதுதொடர்பாக, இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜிக்னேஷ் மேவானி, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்தார்.

நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை முன்வைத்துப் பேசிய அவர், அதற்காக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா அரசு வெட்கப்பட வேண்டும் என்றார். “ஏப்ரல் 19-ல் அசாமில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டது. அதேநாளில் போலீஸார் என்னைக் கைதுசெய்வதற்காக 2,500 கிலோமீட்டர் பயணித்து அசாமிலிருந்து குஜராத்துக்கு வந்தனர். இது என் பிம்பத்தைச் சிதைப்பதற்காக முன்கூட்டியே செய்யப்பட்ட சதி” என்று கூறிய அவர், “ஒரு பெண்ணைப் பயன்படுத்தி என் மீது பொய் வழக்கு பதிவுசெய்திருப்பதை, 56 அங்குல கோழைத்தனம். இந்தச் சதியில் பிரதமர் அலுவலகத்துக்கும் தொடர்பு உள்ளது” என்றார்.

குஜராத் பந்த்

மத்திய அரசையும் குஜராத் அரசையும் தொடர்ந்து விமர்சித்துவரும் ஜிக்னேஷ் மேவானி, ஜூன் 1-ல் நடத்தப்படும் மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு (‘குஜராத் பந்த்’) அழைப்பு ஆதரவு அளிக்குமாறும் கோரிக்கை விடுத்திருக்கிறார். வினாத் தாள்கள் வெளியான விவகாரம், முந்த்ரா துறைமுகத்தில் 1.75 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மக்கள் பார்வைக்குக் கொண்டுசெல்லும் வகையிலும், உனாவில் பசு குண்டர்களால் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்துப் போராட்டம் நடத்தியவர்கள் மீதும், சிறுபான்மையினர் மீதும் தொடரப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரியும் போராட்டம் நடத்தப்போவதாக அவர் அறிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.