டெல்லி மாநகராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களில் 53% பேர் பெண்கள்: ஆய்வறிக்கை

வாக்குப்பதிவு இயந்திரம்
வாக்குப்பதிவு இயந்திரம்

டெல்லி மாநகராட்சிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 250 கவுன்சிலர்களில் 132 பேர் பெண்கள் என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் டெல்லி தேர்தல் கண்காணிப்பு அமைப்பு டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 248 வேட்பாளர்களின் சுய பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்தது. முழுமையான பிரமாணப் பத்திரங்கள் கிடைக்காததால் வெற்றி பெற்ற இரண்டு வேட்பாளர்களின் விவரங்களை பகுப்பாய்வு செய்ய முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள அந்த அறிக்கையில், மொத்தமுள்ள 248 கவுன்சிலர்களில், 132 பேர் (53 சதவீதம்) பெண்கள் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் சுல்தான்புரி-ஏ வார்டு கவுன்சிலர் போபி திருநங்கை ஆவார். 2017-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட 266 கவுன்சிலர்களுக்கான தரவு கிடைத்துள்ளது, அதில் 139 (52 சதவீதம்) பெண்கள் இருந்தனர்.

2017ல் அப்போது டெல்லியின் மூன்று மாநகராட்சிகளில் 270 வார்டுகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவை ஒரே மாநகராட்சியாக்கப்பட்டு வார்டுகளின் எண்ணிக்கை 250 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 248 கவுன்சிலர்களில் 126 பேர் (51 சதவீதம்) தங்கள் கல்வித் தகுதி 5 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளதாக அறிவித்துள்ளனர். அதே சமயம் 116 பேர் (47 சதவீதம்) பட்டதாரி மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். வெற்றி பெற்ற நான்கு பேர் டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் இரண்டு பேர் படிக்காதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 84 பேர் (34 சதவீதம்) தங்கள் வயது 21 முதல் 40 வயது வரை உள்ளதாகவும், 164 பேர்(66 சதவீதம்) தங்கள் வயது 41 முதல் 70 வயது வரை உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

டெல்லியில் மொத்தமுள்ள 250 இடங்களில் 134 வார்டுகளில் வென்று 15 ஆண்டு கால பாஜக ஆட்சியை ஆம் ஆத்மி கட்சி முடிவுக்குக் கொண்டு வந்தது. பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும், மூன்று வார்டுகளில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in