இப்படித்தான் வாக்களிக்கிறது உபி!

இப்படித்தான் வாக்களிக்கிறது உபி!

தம்பி
readers@kamadenu.in


உத்தர பிரதேசம். மக்கள்தொகை அடிப்படையில் (20 கோடி) இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலம். நிலப்பரப்பு அடிப்படையில் இந்தியாவிலேயே நான்காவது பெரிய மாநிலம். ஒவ்வொரு தேர்தலையும் தீர்மானிக்கும் வகையில் அதிக மக்களவைத் தொகுதிகளைக் (80) கொண்ட மாநிலம். இப்படியாகப் பலவகைகளிலும் முக்கியத்துவம் கொண்ட இந்த மாநிலம் தற்போது ஏப்ரல் 11 தொடங்கி மே 19 முடிய என்று ஏழு கட்டங்களாக வாக்களித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தைவிடவும் உபியை நாடு முழுக்கவும் உள்ளவர்கள் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில் அங்குள்ள மக்கள் தங்கள் வாக்கை எப்படிப் பார்த்திருக்கிறார்கள்/ பார்க்கிறார்கள் என்பதைப் பார்ப்போமா?உத்தர பிரதேசம்தான் இந்தியாவா?

உத்தர பிரதேசம் இதுவரை 8 பிரதமர்களை இந்தியாவுக்குத் தந்திருக்கிறது. மேலும், மக்கள்தொகை, அதிக மக்களவைத் தொகுதிகள், இந்தி பேசும் மாநிலம் என்ற அடிப்படைகளிலும் தாங்கள்தான் இந்தியா என்ற ஒருவித மேட்டி
மையில் இருப்பவர்கள் அந்த மாநிலத்தினர். இத்தனைக்கும் கல்வி, தொழில் முதலானவற்றில் மிகவும் பின்தங்கிய மாநிலம் அது. சாதி, மதம், பழமைவாதம் போன்றவைதான் அந்த மாநிலத்தின் பின்தங்கிய நிலைக்குப் பிரதான காரணங்கள். தமிழ்நாடு, கேரளம் போன்ற மாநிலங்கள் கல்வி, வளர்ச்சியினூடாகத் தங்கள் வாழ்க்கையை வரையறுக்கிறார்கள் என்றால் உபி மக்கள் சாதி, மதங்களைக் கொண்டே அந்த வரையறையைச் செய்கிறார்கள். ஆகவே, கட்சி வேறுபாடு இல்லாமல் அனைவரும் மக்களின் இந்தப் பிற்போக்கான நிலையைச் சுரண்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும்.

இதுவரை உபியின் மக்களவைத் தேர்தல்கள்...

இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் 1951-1952 ஆண்டுகளில் நடைபெற்றது. அன்று தொடங்கி இன்று வரை உபி மக்கள் வாக்களித்திருக்கும் விதத்தை வைத்துப் பார்க்கும்போது சுதந்திர இந்தியாவுக்குப் பிறகான தேர்தல் மனநிலையின் வரலாற்றை நாம் உருவாக்கிவிடலாம்.

முதல் பொதுத்தேர்தலில் அப்போதிருந்த 69 தொகுதிகளில் 64-ஐ வென்ற காங்கிரஸின் ஆதிக்கம் 1967-ல், 85-க்கு 48 என்று குறைந்தாலும் நீடிக்கவே செய்தது. ஆனால், நெருக்கடி நிலைக்குப் பிறகான பொதுத்தேர்தலில் 85-க்கு பூஜ்ஜியம் என்ற மதிப்பெண்ணை வாங்கி அதன் தொடரோட்டம் தற்காலிகமாக நிறைவுக்கு வந்தது. அதன் பிறகு 1980-ல் நடந்த பொதுத்தேர்தலில் 85-க்கு 50 என்று உயிர் பிழைத்த காங்கிரஸ், இந்திரா காந்தி கொல்லப்பட்ட ஆண்டில் நடந்த தேர்தலில்தான் கடைசியாக அதிக இடங்களை வென்றது, 85-க்கு 83. காங்கிரஸைத் தவிர ஜனசங்கம் (பாஜகவின் தாய்), கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவை அவ்வப்போது சிறுசிறு வெற்றிகளைப் பெற்றன. நெருக்கடி நிலைக்குப் பிறகு ஜனதா தளம் பெற்ற பெருவெற்றி முக்கியமானது. 1980-ல் உருவான பாஜக தனது முதலாவது பெரிய மக்களவைத் தேர்தல் வெற்றியை உபியில் 1991-ல் சுவைத்தது. 85-க்கு 51 இடங்களை வென்றது. ஆனால், பாஜகவுக்கு உபியில் கிடைத்த மிகப் பெரிய வெற்றி கடந்த தேர்ந்தலில் 80-க்கு 73 இடங்களை அது பெற்றதுதான். காங்கிரஸ், பாஜக ஆகிய தேசிய கட்சிகள் விளையாடிக்கொண்டிருந்த களத்தில் முறையே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட மக்கள் ஆகியோரின் கட்சிகளான சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவையும் இறங்கின. 1989-லிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிகள் பெற்ற சமாஜ்வாதி கட்சி கடந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் பாஜகவுக்கு அடுத்ததாக இருந்தாலும் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியாமல் போனது. 1996-லிருந்து கணிசமான வெற்றிகளைப் பெற்றுவந்த சமாஜ்வாதி கட்சி கடந்த தேர்தலில் உபியில் நான்கே தொகுதிகளை மட்டும் வென்று பெரும் சரிவைச் சந்தித்தது.

உபி மக்கள் எப்படி வாக்களிக்கிறார்கள்?

ஏற்கெனவே, சாதியிலும் மதப் பழமைவாதத்திலும் ஊறிப்போயிருக்கும் உபி மக்களை அப்படியே வைத்திருக்கும் வரையில்தான் தாங்கள் பிழைக்க முடியும் என்று அரசியல் கட்சிகள் பலவும் நினைக்கின்றன. அந்த மக்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். ஆகவேதான், பாபர் மசூதி விவகாரம் உச்சத்தை அடைந்ததும் பாஜக செல்வாக்கு உயர்ந்ததும் ஒன்றாக நிகழ்ந்தது. மசூதி இடிப்புக்குப் பிறகு, ராமர் கோயில் கட்டுவோம் என்று இன்றுவரை இழுத்துப்பிடித்துக்கொண்டுதான் இருக்கிறது பாஜக.

உபியின் மக்கள்தொகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 40%, முற்பட்ட வகுப்பினர் 23%, பட்டியல் இனத்தவர் 21% முஸ்லிம்கள் 19% இருக்கிறார்கள். இதில் பகுஜன் சமாஜ் கட்சி பட்டியல் இனத்தவரையும் சிறுபான்மையினரையும் குறிவைக்கிறது.

சமாஜ்வாதி கட்சிக்கு இருக்கவே இருக்கிறது இதர பிற்படுத்தப் பட்டோர் வாக்குவங்கி. தற்போதைய தேர்தலில் இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணி வைத்திருப்பதால் பாஜகவுக்குப் பேரிழப்பு ஏற்படும் என்றே தெரிகிறது. ஏற்கெனவே, உபியில் தங்கள் செல்வாக்கை இழந்து நிற்கும் காங்கிரஸுக்கு இந்தக் கணக்கு எதுவும் உதவாது. பாஜகவுக்கு எதிராக அதனால் பெரும் கூட்டணியை அங்கு ஏற்படுத்த முடியாமல் போனதுதான் துரதிர்ஷ்டம். ராகுல், சோனியா தொகுதிகளில் மட்டும் மாயாவதி-அகிலேஷ் கூட்டணியினர் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தாமல் விட்டது காங்கிரஸுக்கு ஒரு நிம்மதி.

பிரச்சினைகளுக்கு நடுவே!

பெரிய மாநிலமாக இருக்கும் உபி தான் நியாயமாக மற்ற மாநிலங்களுக்கு நிதியளிப்பதாக இருக்க வேண்டும். ஆனால், நாட்டுக்கு உபி அளிக்கும் வருமானத்தை விட அதிகமாக அந்த மாநிலத்துக்கு நாடு செலவு செய்கிறது. எவ்வளவு பாலூட்டினாலும் சவலைப்பிள்ளையாகவே உபி இருக்கிறது. இதற்கிடையே, வேலைவாய்ப்பின்மை, மதப்பிரிவினை
வாதம் போன்றவையும் உபியை அலைக்கழிக்கின்றன. மாட்டிறைச்சி விவகாரத்தால் அங்கு விவசாயம் அடைந்திருக்கும் வீழ்ச்சி, யோகி ஆதித்யநாத்தின் பொறுப்பற்ற ஆட்சி என்று பாஜகவுக்கு உலைவைக்கப் பல காரணங்கள் அங்கே வரிசை கட்டுகின்றன.

உபியில் தற்போது இரண்டு கட்டத் தேர்தல் முடிந்திருக்கிறது. கடந்த பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகளைவிட இம்முறை குறைவாகவே பதிவாகி வருவதைப் பார்த்தால், பாஜகவுக்கு எதிரான கணக்கு வேலை செய்ய ஆரம்பித்திருப்பது போலவே 
தெரிகிறது. இதை உணர்ந்தோ என்னவோ வெயிலைப் போலவே பிரதமர் மோடியின் பிரச்சாரமும் அங்கு சூடுபிடிக்கிறது. ராகுல், மாயாவதி, அகிலேஷ் என்று ஒருவருக்கொருவர் சளைக்காமல் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.

பிரதமர் மோடியும் இன்னொரு பிரதம வேட்பாளரான ராகுலும் தங்கள் வழக்கப்படி உபியில் களம் காணுகிறார்கள். இவர்கள் ஏற்கெனவே உபியில் வென்றிருந்தும்கூட அந்த மாநிலம் இன்னும் அப்படித்தான் இருக்கிறது என்ற உண்மை சுடத்தான் செய்கிறது. இவர்களுக்கு நடுவே, மாயாவதியின் பகுஜன் சமாஜும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியும் கைகோத்திருக்கின்றன. இந்தக் கூட்டணி தாமரையையும் கையையும் வீழ்த்துமா என்பதை மே 23 நமக்குச் சொல்லிவிடும். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in