பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா(பிஎஃப்ஐ) மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
பிஎஃப் அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த செப். 22-ம் தேதி, கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் பிஎஃப் தலைவர் ஓஎம்ஏ சலாம் வீடு உட்பட அமைப்பின் மாநில, மாவட்ட அளவிலான தலைவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தினர்.
மேலும், தமிழகத்தில் கோவை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிஎஃப்ஐ மாநில தலைமை அலுவலகத்திலும் இந்த சோதனை நடத்தப்பட்டது.
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளில் சேர மக்களை ஊக்குவித்தல் போன்றவற்றில் ஈடுபட்ட நபர்களின் குடியிருப்பு மற்றும் அலுவலக வளாகங்களில் தேசிய புலனாய்வு முகமையின் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களில், என்ஐஏ, அமலாக்கத்துறை மற்றும் மாநில காவல்துறை இணைந்து பல பிஎஃப்ஐ உறுப்பினர்களை கைது செய்திருந்தது. இந்த சோதனை மற்றும் கைது நடவடிக்கையைக் கண்டித்து பிஎஃப்ஐ உறுப்பினர்கள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் வீடுகளில் மாநில காவல் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனைகளின் அடிப்படையில் பிஎஃப்ஐ மற்றும் எஸ்டிபிஐ அமைப்புகளைச் சேர்ந்த 247 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்டவிரோதமானது என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் பிஎஃப்ஐ மற்றும் அதன் துனை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
கடந்த மே மாதம் சென்னையில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பிஎஃப் அமைப்பு குறித்து பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது அவர் பேசுகையில், "நாட்டின் சமூக அமைதியை சீர்குலைக்க சில அமைப்புகள் முயற்சிக்கின்றன. பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம். மனித உரிமை அமைப்பு போல இந்த இயக்கம் செயல்படுகிறது. ஆனால் ஆப்கானிஸ்தான், சிரியா என யுத்தம் நடைபெறும் நாடுகளுக்கு தீவிரவாத இயக்கங்களுக்கு ஆட்சேர்ப்பில் ஈடுபட்டுள்ளது. மேலும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பானது 16 முகமூடிகளை அணிந்துள்ளது. பல்வேறு வேறு பெயர்களில் மனித உரிமை, அரசியல், மாணவர் இயக்கம் போல முகமூடி அணிந்து இந்தியாவில் இயங்கி வருகிறது. பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா செயல்படுகிறது" என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் அந்த அமைப்பிற்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு தடை விதித்துள்ளது.