5 மாநிலத் தேர்தல்... அரியணை ஏறப்போவது யார்?

5 மாநிலத் தேர்தல்... அரியணை ஏறப்போவது யார்?

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. உத்தர பிரதேசத் தேர்தல் 7 கட்டமாகவும், மணிப்பூர் தேர்தல் 2 கட்டமாகவும், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா தேர்தல்கள் ஒரே கட்டமாகவும் நடந்துமுடிந்திருக்கின்றன. பஞ்சாபைத் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் பாஜகதான் ஆளுங்கட்சியாக இருந்தது என்பதால், இந்தத் தேர்தல்களின் முடிவுகள் பாஜகவினரால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றன.

உபி தேர்தலின் முக்கியத்துவம்

80 மக்களவைத் தொகுதிகளையும், 403 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் கொண்ட உத்தர பிரதேசம், இந்தியத் தேர்தல் களத்தில் எப்போதுமே முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த மாநிலத்திலிருந்துதான் அதிக பிரதமர்கள் தேர்வாகியிருக்கிறார்கள். 2022 உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்குக் கிடைக்கும் வெற்றி, 2024 மக்களவைத் தேர்தலில் அக்கட்சி மீண்டும் வென்று ஆட்சியமைப்பதை உறுதிசெய்யும் எனக் கருதப்படுகிறது. இந்தத் தேர்தலில் யோகி வென்றால், மோடிக்குப் பிறகு பாஜக சார்பில் பிரதமராக அவர் முன்னிறுத்தப்படலாம் என்றும் பரவலாகப் பேசப்படுகிறது.

கணிப்புகள் என்ன சொல்கின்றன?

தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகள் (Exit Polls) உத்தர பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் பாஜகவுக்கே அதிக வெற்றிவாய்ப்பு எனக் கூறியிருக்கின்றன. பஞ்சாபில் இந்த முறை ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்கும் என்றே கணிக்கப்பட்டிருக்கிறது. உத்தராகண்டிலும் கோவாவிலும் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என வாக்குக் கணிப்புகள் தெரிவித்திருக்கின்றன.

உத்தர பிரதேசம்

மொத்த தொகுதிகள் - 403

பெரும்பான்மைக்குத் தேவை - 202

2017 தேர்தலில் வென்றது - பாஜக (312 இடங்கள்)

பஞ்சாப்

மொத்த தொகுதிகள்: 117

பெரும்பான்மைக்குத் தேவை: 59

2017 தேர்தலில் வென்றது: காங்கிரஸ் (77 இடங்கள்)

உத்தராகண்ட்

மொத்த தொகுதிகள்: 70

பெரும்பான்மைக்குத் தேவை: 36

2017 தேர்தலில் வென்றது: பாஜக (57)

கோவா

மொத்த தொகுதிகள்: 40

பெரும்பான்மைக்குத் தேவை: 21

2017 தேர்தலில் வென்றது: பாஜக (13)

* கோவாவில் கடந்த தேர்தலில் 17 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சியால் ஆட்சியமைக்க முடியவில்லை. 13 இடங்களில் மட்டுமே வென்ற பாஜக பிற கட்சிகள், சுயேச்சைகளின் ஆதரவுடன் அரியணை ஏறிவிட்டது.

மணிப்பூர்

மொத்த தொகுதிகள்: 60

பெரும்பான்மைக்குத் தேவை: 31

2017 தேர்தலில் வென்றது: பாஜக (21)

* 2017 மணிப்பூர் தேர்தலில் காங்கிரஸ் 28 இடங்களில் வென்றது. ஆனால், 21 இடங்களில் மட்டும் வென்றிருந்த பாஜக, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை உருவாக்க சுறுசுறுப்பாகக் களமிறங்கியது. என்பிபி, என்பிஎஃப் கட்சிகளுடன் கைகோர்த்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. 2016 வரை காங்கிரஸில் இருந்த செல்வாக்கு மிக்க தலைவரான என்.பீரேன் சிங், மணிப்பூர் மாநிலத்தின் முதல் பாஜக முதல்வரானார்.

குதிரை பேரங்கள்... கூட்டணி முயற்சிகள்

கோவாவைப் பொறுத்தவரை தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சியினரிடையே ஏற்கெனவே பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியும் தங்கள் கூட்டணியை ஆதரிக்கும் என கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோதன்கர் கூறியிருக்கிறார். திரிணமூல் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, காங்கிரஸுடன் மட்டுமல்ல; பாஜகவுடனும் பேசிவருவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் காங்கிரஸுடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கைகோக்குமா எனும் எதிர்பார்ப்பும் உருவாகியிருக்கிறது.

கடந்த முறை கற்றுக்கொண்ட கசப்பான பாடத்தை மறக்காத காங்கிரஸ், இந்த முறை ரொம்பவே உஷாராக இருக்கிறது. தலைநகர் பனாஜி அருகில் உள்ள பாம்போலிம் கிராமத்தில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்கள் கட்சியின் அனைத்து வேட்பாளர்களையும் தங்கவைத்திருக்கிறது காங்கிரஸ் கட்சி.

கோவாவில் கடந்த முறை 21 இடங்களிலேயே வென்றிருந்தாலும், லாவகமாகக் காய்நகர்த்தி அரியணை ஏறிய பாஜக இந்த முறையும் தயாராக இருக்கிறது. தேர்தலுக்குப் பிறகான நகர்வுகள் குறித்து ஆலோசிக்க கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் செவ்வாய்க்கிழமையே டெல்லிக்குச் சென்றிருந்தார்.

உத்தராகண்டில், பாஜக முதல்வர் புஷ்கர் சிங் தாமி, முன்னாள் முதல்வர் ரமேஷ் போக்ரியால் நிஷாங் உள்ளிட்ட தலைவர்களுடன் பாஜக பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா பேசியிருக்கிறார். காங்கிரஸ் தரப்பில் உத்தராகண்ட் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கோதியால் உள்ளிட்ட தலைவர்களுடன் கட்சியின் மத்திய பார்வையாளர் தீபேந்திர ஹூடா ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

மணிப்பூரில் இந்த முறை பாஜகவுக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் என வாக்குக் கணிப்புகள் சொல்கின்றன. எனவே, பெரிய அளவில் குதிரை பேரங்களுக்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. அதேவேளையில், பாஜக 25 இடங்களுக்குக் குறைவாக வென்றால், மீண்டும் குதிரை பேரங்கள் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in