5 மாநில தேர்தல்; ஆட்டம் காணும் இந்தியா கூட்டணி!

இந்தியா கூட்டணி
இந்தியா கூட்டணிஓவியம்: வெங்கி

ஆரம்பித்த சில மாதங்களிலேயே ஆட்டம் கண்டுள்ளது இந்தியா கூட்டணி. அறிவிக்கப்பட்டுள்ள 5 மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்துள்ளதால், இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்த கேள்வி பலமாக எழுந்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான ட்ரைலராக 5 மாநில தேர்தல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் முக்கிய போட்டியாளராக பாஜக – காங்கிரஸ் கட்சிகள் உள்ளன. அதேபோல தெலங்கானா, மிசோரம் மாநிலங்களில் முக்கிய எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் இருக்கிறது. இந்த 5 மாநில தேர்தல்களில் எப்படியாவது கவனிக்கத்தக்க வெற்றியை பதிவு செய்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஆனால், காங்கிரஸுக்கு போட்டியாக இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, சிபிஎம், சிபிஐ, ஆர்எல்டி போன்ற கட்சிகளே களமிறங்கியுள்ளது வினோதமாகி உள்ளது.

மத்திய பிரதேசத்தில் பாஜக – காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவினாலும், தேர்தல் முடிவுகளில் இரு கட்சிகளும் சமபலத்துடன் உள்ளதாகவும், இழுபறி நிலவுமென்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. எனவே, இந்த தேர்தலில் காங்கிரஸுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாக்குமே முக்கியமானது. ஏனென்றால் இங்கே உள்ள 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி பலமாக உள்ளது.

கடந்த 2018 தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ம.பியில் ஒரு தொகுதியில் வென்றதுடன், 5 தொகுதிகளில் இரண்டாம் இடம் பிடித்தது. இம்முறை காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க சமாஜ்வாதி கட்சி முன்வந்தது. சில கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியுற்றதால் தனித்துப் போட்டியிடுவதாக சமாஜ்வாதி அறிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியும் இங்கே தனித்துப்போட்டியிடுகிறது.

ம.பி மட்டுமின்றி ராஜஸ்தான், சத்தீஸ்கரிலும் சமாஜ்வாதி கட்சிக்கு கணிசமான ஆதரவு உண்டு. எனவே அங்கேயும் தனித்து களமிறங்க உள்ளதாக அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். ஆம் ஆத்மி கட்சி 5 மாநிலங்களிலுமே தனித்துப் போட்டியிடுவதாக முன்பே அறிவித்து வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகிறது. இடதுசாரிகள் இந்த 5 மாநிலங்களிலும் தனித்தோ அல்லது வேறுசில கூட்டணிகளில் இடம்பெற்றோ போட்டியிடுகின்றனர்.

ராகுல் காந்தி, அர்விந்த் கேஜ்ரிவால்
ராகுல் காந்தி, அர்விந்த் கேஜ்ரிவால்

பாஜகவுக்கு பலமான போட்டியாக இருக்கும் என்று எதிர்க்கட்சிகளால் சொல்லப்பட்ட ‘இந்தியா கூட்டணி’யால் இந்த 5 மாநில தேர்தல்களில் ஒன்றிணைய முடியாத சூழல் ஏற்பட்டிருப்பது சலசலப்பை உருவாக்கியுள்ளது.

ம.பி-யில் கூட்டணி முறிவுக்கான காரணத்தை விளக்கிய அகிலேஷ் யாதவ், “தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ் கட்சி ‘பெரியண்ணன்’ தோரணையுடன் நடந்துகொள்கிறது. இது இந்தியா கூட்டணியில் பாதிப்புகளை உருவாக்கும்” என்று தெரிவித்துள்ளார். அதேசமயம் அவர் ஒரு முக்கியமான கேள்வியையும் எழுப்பியுள்ளார். அதாவது, இந்தியா கூட்டணி என்பது தேசிய அளவில் மட்டுமா அல்லது மாநிலங்கள் அளவிலும் உள்ளதா என்று கேட்டுள்ளார். மேலும், ம.பியில் காங்கிரஸ் கட்சி தங்களை நடத்திய விதம் உத்தரபிரதேசத்திலும் எதிரொலிக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணி இதுவரை மூன்று ஒருங்கிணைப்பு கூட்டங்களை நடத்தியுள்ளது. இதனால் எந்த விதத்திலும் பலன் கிடைத்தாக தெரியவில்லை. ஏனென்றால் இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமூல், சமாஜ்வாதி, இடதுசாரிகள் போன்ற கட்சிகளே தங்களுக்குள் முட்டிமோதிக்கொண்டிருக்கின்றன. மாநில அளவில்கூட இவர்களால் ஒருங்கிணைய முடியாமல் போனால் எப்படி தேசிய அளவில் ஒருங்கிணைவார்கள் என்ற கேள்வி எழுகிறது. சட்டப்பேரவை தேர்தல்களில் சச்சரவு இல்லாமல் தொகுதிகளை பங்கிட்டுக்கொள்ள முடியாதவர்களால் எப்படி மக்களவைத் தேர்தலில் மட்டும் சமரசமாக இருக்க முடியும் என்றும் வினா எழுப்பப்படுகிறது.

இந்தியா கூட்டணியில் உள்ள முரண்பாடுகளை இந்த 5 மாநில தேர்தலே வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது. ஏனென்றால், ம.பி-யில் எளிதாக கூட்டணிக்குள் கொண்டுவந்திருக்க கூடிய சமாஜ்வாதியை, தனித்துப் போட்டியிடும் சூழலுக்கு தள்ளியிருக்கிறது காங்கிரஸ். இரு தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்தாலும், இதில் கூடுதல் பொறுப்பு காங்கிரஸுக்குத்தான் உள்ளது என்பதை மறுக்க முடியாது.

ம.பி-யில் பெரிய கட்சியாக உள்ள காங்கிரஸ் ‘பெரியண்ணன்’ மனப்பான்மையுடன் நடந்துகொள்ளும் பட்சத்தில், மற்ற மாநிலங்களில் பலமாக உள்ள கட்சிகள் அங்கே ‘பெரியண்ணன்’ தோரணையுடன் நடந்துகொள்ளும். உதாரணத்துக்கு, ம.பியில் இப்போது காங்கிரஸ் நடந்துகொண்டதைப் போல, இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள உத்தரபிரதேச மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி நடந்துகொள்ளும். ஏனென்றால் அங்கே சமாஜ்வாதிதான் காங்கிரஸைவிட பலமான கட்சி.


அதேபோல ஆம் ஆத்மி கட்சியும் இந்த 5 மாநிலங்களிலும் எந்த கூட்டணி முன்னெடுப்புகளிலும் இறங்காமல், நேரடியாக வேட்பாளர்களை அறிவித்து களமிறங்கியுள்ளது. இதிலிருந்து கேஜ்ரிவால் மாநில அளவிலான கூட்டணிகளுக்கு தயாராக இல்லை என்பது திட்டவட்டமாகிறது.

முக்கியமாக, 5 மாநிலங்களிலும் கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் இடதுசாரிகளை கூட்டணிக்குள் கொண்டுவர எந்த பெரிய கட்சியும் முயற்சி எடுக்கவே இல்லை. இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்போது தனித்தனியாக முட்டி மோதி நிற்கும் இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் அப்போது திடீரென ஒருங்கிணைவார்கள் என்பது சாத்தியமாகக்கூடியதா?

முதலில் இந்தியா கூட்டணி தேசிய அளவிலானதா அல்லது மாநிலங்கள் அளவிலானதா என்பதை அவர்கள் தெளிவுப்படுத்த வேண்டும். ஒருவேளை, தேசிய அளவில் மட்டும்தான் கூட்டணி என்றால், மாநிலங்களைத் தாண்டி அது எப்படி சாத்தியமாகும் என்பதற்கான செயல்திட்டத்தை அவர்கள் வெளியிட வேண்டும்.

பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைகிறோம் என்ற ஒரே ஒரு முழக்கத்தை வைத்துக்கொண்டு, தங்களுக்குள்ளேயே ஓராயிரம் பிளவுகளை வைத்துக்கொண்டிருக்கிறது இந்தியா கூட்டணி. அதனை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது இந்த 5 மாநில தேர்தல் முன்னேற்பாடுகள். இப்போதாவது இந்தியா கூட்டணி விழித்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் வெறும் வார்த்தை ஜாலத்துடனேயே இந்தியா கூட்டணி வலுவிழந்துபோகும்!

இதையும் வாசிக்கலாமே...

உஷார்... தமிழகத்தின் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

பிரபல கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்!

பரபரப்பு… அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!

அதிர்ச்சி... புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை!

அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி... வாக்குவாதத்தால் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in