கேரள அரசியல் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது?

6 மாதங்களில் 5 கொலைகளால் அதிர்ச்சி
பினராயி விஜயன்
பினராயி விஜயன்

கேரளத்தில் ஆர்எஸ்எஸ், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளுக்கு இடையேயான பகை, கொலைவரை நீள்கிறது. 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து இரு படுகொலைகள் நிகழ்ந்திருப்பதால் கேரளம் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. இந்த விவகாரம் மோசமான நிலையை எட்டுவது கேரள மக்களைக் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. கடந்த 6 மாதங்களில் 5 அரசியல் படுகொலைகள் நிகழ்ந்திருப்பதை கேரளக் காவல் துறையின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

சுபைர்
சுபைர்

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தின் எலப்புள்ளி பகுதியைச் சேர்ந்த சுபைர் நேற்று முன்தினம் (ஏப்.15) பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு தனது தந்தை அபுபக்கருடன் பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவர் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது பின்னால் வந்த கார் ஒன்று மோதியது. மற்றொரு காரில் வந்த கும்பல் சுபைரை சரமாரியாக வெட்டியது. அக்கம்பக்கத்தினர் சுபைரை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

ஏற்கெனவே கடந்த நவம்பர் மாதம் சஞ்சித் என்ற ஆர்எஸ்எஸ் ஊழியர் அதே இடத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில் 10 பேர் மீது காவல் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவர்கள் எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். ஆர்எஸ்எஸ் ஊழியர் கொலைக்குப் பழிக்குப் பழியாகத்தான் எஸ்.டி.பி.ஐ நிர்வாகி சுபைர் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று பாலக்காடு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன்(45) எனும் ஆர்எஸ்எஸ் ஊழியர் படுகொலை செய்யப்பட்டார்.

ஸ்ரீனிவாசன்
ஸ்ரீனிவாசன்

இந்தத் தொடர் அரசியல் மரணங்கள் குறித்து கேரள காவல் துறை உயரதிகாரிகளிடம் பேசினோம்.

“நவம்பர் மாதம் சஞ்சித் மரணத்தில் இருந்தே எஸ்.டி.பி.ஐ, பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, ஆர்எஸ்எஸ் இடையேயான மோதல் தொடர்ந்து நடந்துவருகிறது. கடந்த 6 மாதங்களில் 5 அரசியல் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. அதிலும் சினிமா பாணியில் ஒவ்வொரு கொலையையும் கொடூரமாக அரங்கேற்றி வருகின்றனர். சஞ்சித் மரணத்தின் போது அவர் டூவீலரில் சென்றபோது பின்னால் வந்த ஒருகார் அவர் மீது மோதியது. அவர் அதில் நிலைகுலைந்தபோது பின்னால் காரில் வந்த கும்பல் அவரை வெட்டிக் கொன்றது. அதே பாணியைத் தான் சுபைர் மரணத்தில் எதிர்தரப்பு கையாண்டது. அதிலும் சுபைர் மீது மோதிய கார், முன்பு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ அமைப்பினரால் கொல்லப்பட்ட சஞ்சித் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. சஞ்சித் கொலைவழக்கில் விசாரிக்கப்பட்டவர் சுபைர். சஞ்சித் படுகொலைக்குப் பழிவாங்கும் விதமாக அவரைக் கொன்றனர். சுபைரின் உடல் ஊர்வலமாகக் கொண்டு செல்லும் வழியில் தான் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் ஸ்ரீனிவாசன் கடைவருகிறது. அவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்” என்று காவல் துறை உயரதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், “மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பதிவிட்டால் கைது செய்வோம் என எச்சரித்துள்ளோம். பாலக்காடு மாவட்டத்தில் 300 பட்டாலியன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த டிசம்பர் 18-ம் தேதி ஆழப்புழா மாவட்டம், மண்ணஞ்சேரியில் எஸ்.டி.பி.ஐ மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷன் கொலை செய்யப்பட்டிருந்தார். அதற்குப் பழிக்குப் பழியாக, பாஜக மாநிலக் குழு உறுப்பினர் ரஞ்சித் சீனிவாசன் அடுத்த 24 மணிநேரத்தில் கொல்லப்பட்டார். அந்தவரிசையில் கடந்த 6 மாதங்களில் 5 கொலைகள் நடந்துள்ளன” என்கிறார்கள் காவல் துறையினர்.

அரசு என்ன செய்ய வேண்டும்?

கேரள முதல்வர் பினராயி விஜயன் இவ்விஷயத்தில் நேரடியாகத் தலையிட்டு இரு குழுக்களுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் நல்லெண்ண குழுக்களை அமைக்கலாம். இருதரப்பிலும் இருக்கும் மூத்த தலைவர்களையும், அரசையும் இணைத்து ஒரு கமிட்டி அமைப்பதும் பலன் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in