தேர்தல் தேதி அறிவிக்கும் நாளில் 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா: மேகாலயா அரசியலில் பரபரப்பு

தேர்தல் தேதி அறிவிக்கும் நாளில் 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா: மேகாலயா அரசியலில் பரபரப்பு

நாகாலாந்து, மேகாலயா மற்றும் திரிபுரா சட்டசபை தேர்தல்களுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது. இந்த சூழலில், மேகாலயாவில் இன்று 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து ஐக்கிய ஜனநாயக கட்சியில் சேர்ந்துள்ளனர்.

ஹில் ஸ்டேட் பீப்பிள்ஸ் டெமாக்ரடிக் கட்சியின் (எச்எஸ்பிடிபி) எம்எல்ஏவும், கேபினட் அமைச்சருமான ரெனிக்டன் லிங்டோ டோங்கர், திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஷிட்லாங் பலே, சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மேரல்போர்ன் சையம் மற்றும் பி.டி.சவ்க்மி மற்றும் சுயேச்சை எம்எல்ஏ லம்போர் மல்ங்கியாங் ஆகியோர் இன்று ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் ஐக்கிய ஜனநாயக கட்சியில் இணைவதாக அறிவித்துள்ளனர்.

இதன் மூலமாக, காங்கிரஸ் மற்றும் ஹெச்எஸ்பிடிபி ஆகிய இரு கட்சிகளுக்கும் அதிகாரப்பூர்வமாக மாநிலத்தில் எம்எல்ஏக்கள் இல்லாத நிலை உருவாகியுள்ளது. 2018 சட்டமன்றத் தேர்தலின்போது மேகாலயாவில் 21 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக இருந்தது. அதுபோல அந்த தேர்தலில் எச்எஸ்பிடிபி கட்சி 2 இடங்களில் வென்றது

சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா காரணமாக தற்போது மேகாலயா சட்டமன்றத்தில் 18 இடங்கள் காலியாக உள்ளன. தற்போதைய சூழலில் மேகாலயாவில் ஆளும் என்பிபிக்கு 20 உறுப்பினர்களும், ஐக்கிய ஜனநாயக கட்சிக்கு 8 எம்எல்ஏக்களும், பாஜகவுக்கு 3 உறுப்பினர்களும் ,பிடிஎப் கட்சிக்கு 2 உறுப்பினர்களும் உள்ளன. இந்தக் கட்சிகள் தற்போது கூட்டணியில் உள்ளன. எதிர்க்கட்சி வரிசையில் திரிணமூல் காங்கிரஸுக்கு 8 இடங்களும், என்சிபி கட்சிக்கு ஒரு உறுப்பினரும் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in