'இந்தியாவுக்கு 5 தலைநகரங்கள்’: அசாம் முதல்வர் அக்கறையும், அரசியல் அக்கப்போரும்!

'இந்தியாவுக்கு 5 தலைநகரங்கள்’: அசாம் முதல்வர் அக்கறையும், அரசியல் அக்கப்போரும்!

இந்தியாவுக்கு மண்டல வாரியாக 5 தலைநகரங்கள் வேண்டும் என்றொரு கோரிக்கையை கொளுத்திப்போட்டிருக்கிறார் அசாம் முதல்வரான ஹிமந்தா பிஸ்வா சர்மா. இவருக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் இடையே ட்விட்டரில் தொடர்ந்த வார்த்தைப் போரின் ஊடாக இந்த விவாதத்தை எழுப்பியுள்ளார் ஹிமந்தா பிஸ்வா சர்மா.

சில தினங்களுக்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில் மேற்கொண்டிருந்த பதிவு அனைத்துக்கும் தொடக்கமானது. ’நாடு முழுக்க புதிதாக அரசுப் பள்ளிகள் தொடங்கப்பட வேண்டியிருக்கிறது. பள்ளிகள் மூடப்படுவது மோசமான முன்னுதாரணம்’ என்ற கேஜ்ரிவால் பதிவின் இணைப்பில் அசாம் மாநிலத்தில் மூடுவிழா காணப்படும் பள்ளிகள், ஆசிரியர்கள் இல்லாத தொடக்கப்பள்ளிகள் தொடர்பான செய்திகள் இருந்தன. இதனால் பதிலடி தரவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார் அசாம் முதல்வர் சர்மா.

ஆனபோதும் அசாம் பள்ளிகள் குறித்த கேஜ்ரிவாலின் கேள்விக்கு சர்மாவின் பதிவில் நேரடியான பதில் இல்லை. விடாக்கண்டரான கேஜ்ரிவால் ’அசாம் அரசுப் பள்ளிகளை பார்வையிட எப்போது வருகை தரட்டும்?’ என்றதோடு ’வாருங்கள் அசாம் பள்ளிகளை கட்டமைக்க இணைந்து செயல்படுவோம்’ என்று கோரிக்கையும் வைத்தார். இவற்றுக்கு நேரடி பதில் தராத சர்மா கடைசி அஸ்திரமாக ’தேசத்துக்கு 5 தலை நகரங்கள் வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். சர்மாவின் இந்த வாதம் சமூக வலைதளத்தில் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

அரவிந்த் கேஜ்ரிவால் - ஹிமந்தா பிஸ்வா சர்மா
அரவிந்த் கேஜ்ரிவால் - ஹிமந்தா பிஸ்வா சர்மா

ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கேஜ்ரிவாலின் அசுர வளர்ச்சி எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பெரும் குடைச்சலாகும் என்றே காவி முகாம் கணிக்கிறது. டெல்லிக்கு அப்பால் பஞ்சாப்பிலும் பாதம் பதித்திருக்கும் ஆஆக, தற்போது குஜராத் சட்டப் பேரவை தேர்தலிலும் குதித்துள்ளது. குஜராத் மாநிலத்துக்காக அரவிந்த் கேஜ்ரிவால் பட்டியலிட்ட இலவச திட்டங்கள் பிரதமர் மோடியால் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. நடந்து முடிந்த 5 மாநில தேர்தலிலும் உபி, உத்தரகாண்ட், கோவா என ஆம் ஆத்மி கட்சி களம் கண்டதை பாஜக ரசிக்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கலகலத்துப் போயிருக்கும் சூழலில் பாஜக மற்றும் காங்கிரசுக்கு மாற்றாக தேசியளவில் தங்களை முன்னிறுத்தும் ஆம் ஆத்மியின் வளர்ச்சியை முளையிலேயே கிள்ள பாஜக தடுமாறி வருகிறது. அமரீந்தர் சிங் வாயிலாக பஞ்சாப்பில் பாஜக முன்னெடுத்த முயற்சிகளை முறியடித்து அங்கே ஆம் ஆத்மி ஆட்சி அமைத்திருப்பதை பாஜக கவலையுடன் பார்க்கிறது.

ஏப்ரலில் அசாம் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே ஆம் ஆத்மி நின்றது. குவஹாத்தி முனிசிபல் கார்ப்பரேஷனுக்கான தேர்தலில் எவரும் எதிர்பார்க்கா வகையில் 2 பிரதான இடங்களை ஆஆக வென்று ஆச்சரியம் காட்டியது. அசாமில் பாஜக தலைமையிலான வலுவான ஆட்சி அமைந்திருப்பதாக மார்தட்டிக்கொள்ளும் முதல்வர் சர்மாவை இவை சீண்டியுள்ளன.

அசாமில் ஆம் ஆத்மி கட்சியினர்
அசாமில் ஆம் ஆத்மி கட்சியினர்

எதிர்பாரா வெற்றியால் உற்சாகமடைந்திருக்கும் ஆஆக 2026 சட்டப் பேரவை தேர்தலை குறிவைத்து வட அசாமில் கட்சியை வலுப்படுத்தும் ஏற்பாடுகளில் தொடங்கியுள்ளது. இதன் அடையாளங்களில் ஒன்றாக அரவிந்த் கேஜ்ரிவால் பதிவுகளில் அசாம் மாநிலம் அதிகம் இடம்பெற்று வருகிறது. இதற்கு பதிலடியாக, கேஜ்ரிவாலை டெல்லி முதல்வர் என்ற வட்டத்துக்குள்ளாகவே வைத்து தாக்கி வருகிறார் அசாம் முதல்வர் சர்மா.

இந்த சந்தடியில் பிரதமர் மோடி புகழ் பாடவும் சர்மா மறக்கவில்லை. ’கடந்த 75 ஆண்டுகளாக காணாத வளர்ச்சியை பிரதமர் மோடி வழங்கிய நலத்திட்டங்களால் அசாம் மாநிலம் எட்டவிருக்கிறது’ என்று புகழும் சர்மா, ’லண்டன், பாரிஸ் போன்ற உலகப்பெரும் நகரங்களுக்கு இணையாக டெல்லியை மாற்றுவேன் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் வளரும் அசாமுடன் ஒப்பிடும் அளவுக்கு கீழிறங்கியுள்ளதாக’ அரவிந்த் கேஜ்ரிவாலை இகழ்ந்தும் வருகிறார். இவற்றின் ஊடாகவே ‘தேசத்துக்கு 5 தலை நகரங்கள் வேண்டும்’ என்ற சர்மா எழுப்பிய கோரிக்கை சமூக ஊடகங்களில் பற்றிக்கொண்டுள்ளது.

மண்டல வாரியாக 5 தலைநகரங்கள் வேண்டும் என்று கோரியுள்ள சர்மா, அவற்றில் ஒன்று அசாமில் வேண்டும் என்பதற்கும் மறைமுகமாக அழுத்தம் தந்துள்ளார். அசாமுக்கு வெளியேயும் பாஜக முகாமின் அதிகார மையங்களில் ஒன்றாக வளர்ந்து வரும் சர்மாவின் இந்தக் குரல் பாஜகவின் உள்ளார்ந்த குரலாகவும் பார்க்கப்படுகிறது. மத்தியிலும், பெரும்பான்மை மாநிலங்களிலும் தன் வெண்கொற்றக் குடையை விரித்திருக்கும் பாஜகவுக்கு, நாட்டின் தலைநகரில் ஆம் ஆத்மியிடம் ஆட்சியை பறிகொடுக்கும் பரிதாபத்தை செரிக்க இயலாது தவிக்கிறது.

டெல்லி
டெல்லி

இதையே தனக்கான வாய்ப்பாக கருதும் ஆம் ஆத்மி, வட மாநிலங்களில் தொடங்கி தற்போது கர்நாடகா வரை தேர்தலில் கால் பாவிக்க முயன்று வருகிறது. டெல்லியின் துணைநிலை ஆளுநர் முதல் மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் வரும் காவல்துறை வரை பல்வேறு குடைச்சல்களை தொடர்ந்தும் அரவிந்த் கேஜ்ரிவாலின் திடம் சரிந்தபாடில்லை. புளிப்பின் உச்சத்தில் நாட்டின் தலைநகரை டெல்லிக்கு வெளியே வைப்போம் என்பது போன்ற குரல்கள், ஆஆக இரண்டாம் முறையாக அங்கே ஆட்சி அமைத்ததில் இருந்தே அவ்வப்போது முணுமுணுப்புக்கு ஆளாகி வருகின்றன.

இவற்றின் எதிரொலியாகவே தற்போதைய அசாம் முதல்வரின் 5 தலைநகர கோரிக்கையும் கவனிக்கப்படுகிறது. டெல்லியில் அதிகரிக்கும் குடியேற்றங்கள், பரவலாகும் நகர விரிவாக்கம், உலகின் மாசு மிகுந்த பெருநகரங்களின் சேர்ந்திருப்பது என நடைமுறை சார்ந்து டெல்லி வாசிகளாலும் இந்த கோரிக்கை அவ்வப்போது முன்வைக்கப்படுவதுண்டு. மற்றுமொரு முறை ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைக்குமா என்ற பதைபதைப்பிலும் இது தொக்கியிருக்கிறது.

பாஜகவின் குதிரை பேர முயற்சிகளுக்கு ஆம் ஆத்மியும் ஆளாகுமோ என்ற அச்சத்தின் உச்சத்தில், சட்டசபையின் நம்பிக்கை தீர்மானத்துக்கான விவாதத்தின் மத்தியிலும் பாஜகவை பலவகையிலும் தாக்கி வருகிறார் அரவிந்த் கேஜ்ரிவால். அவற்றில் ஒன்றாக தேசியம் தெய்வீகம் என்று மக்களை உணர்வுபெருக்கில் வைத்திருக்கும் பாஜகவை, கல்வி, சுகாதாரம் என மக்கள் நலன்நாடும் நடைமுறை பிரச்சினைகளில் நெருக்கவும் முயற்சித்து வருகிறார். மேலும் மதுபான ஊழல் குற்றச்சாட்டில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை விரைவில் சிபிஐ கைது செய்யும் என்ற அச்சத்தில், சிசோடியா முன்னெடுத்த கல்வித்துறை சிறப்புகளை நாட்டுக்கு உரைக்கும் விதமாகவும் அசாம் முதல்வருக்கு எதிரான கேஜ்ரிவாலின் சீண்டல் பார்க்கப்படுகிறது.

துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுடன் கேஜ்ரிவால்
துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுடன் கேஜ்ரிவால்

இப்போதைக்கு, டெல்லி - அசாம் முதல்வர்களின் ட்விட்டர் யுத்தம் தொடர்ந்து வருகிறது. ‘எப்போது அசாம் அரசுப் பள்ளிகளை பார்வையிட வரட்டும்?’ என்ற ஆரம்ப கேள்வியிலேயே அரவிந்த் கேஜ்ரிவால் இன்னமும் நிற்கிறார். அதைத்தவிர ஏனைய விவகாரங்கள் அனைத்தையும் இழுத்துப்போட்டு சமாளித்து வருகிறார் அசாமின் சர்மா. அதில் ஒன்றாகவே அவர் கிளப்பிய ’5 தலைநகரங்கள்’ விவாதம் தனியாக பற்றிக்கொண்டுள்ளது. அப்படியே தலைநகர பரவலாக்கம் நடைமுறைக்கு வந்தால், அதில் டெல்லி, மும்பை, கொல்கத்தா என்ற வரிசையில் சென்னையும் சேரும்தானே?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in