ஒவ்வொரு மாதமும் 45 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்: குஜராத்தை நடுங்க வைக்கும் எம்எச்ஏ அறிக்கை

ஒவ்வொரு மாதமும் 45 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள்: குஜராத்தை நடுங்க வைக்கும் எம்எச்ஏ அறிக்கை

குஜராத்தில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 45 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாகவும், ஒரு வருடத்தில் 260 பெண்கள் கொல்லப்படுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் (எம்எச்ஏ) அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் குஜராத் என்ற பாஜக தேர்தல் பிரச்சாரத்தை முறியடிப்பது போல மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தற்போது புயலைக் கிளப்பியுள்ளன.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் மக்களவையில் நேற்று தாக்கல் செய்த அறிக்கையில் குஜராத்தில் பெண்களுக்கு எதிரான இழைக்கப்படும் கொடுமைகள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

அந்த அறிக்கையில், குஜராத்தில் கடந்த 2018 முதல் 2021-ம் ஆண்டு வரை 2,156 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். குஜராத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 550 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் 3,762 பெண்கள் தாக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் சராசரியாக 100 பெண்கள் தாக்கப்படுகின்றனர்.

குஜராத்தில் பெண்கள் மீதான ஆசிட் வீச்சு சம்பவங்கள் அற்பமானவை என்று ஆளும் மாநில அரசு கூறினாலும், 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை குஜராத்தில் மொத்தம் 22 ஆசிட் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. குஜராத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக பெண்களுக்கு எதிராக 6 ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடைபெறுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, குஜராத்தில் ஆண்டுதோறும் கூட்டுப் பலாத்கார சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. 2018-ம் ஆண்டில், 8 கூட்டுப் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன. 2021-ம் ஆண்டில், இச்சம்பவங்கள் 17 ஆக அதிகரித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் 56 கூட்டுப் பலாத்கார சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மேலும, குஜராத்தில் ஒவ்வொரு ஆண்டும் 260 பெண்கள் கொல்லப்படுகின்றனர்.

இந்த அதிர்ச்சி அறிக்கை குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் தோஷி கூறுகையில், “ குஜராத் அமைதியான, பாதுகாப்பு வாய்ந்த மாநிலம் என்று பாஜக தலைவர்களின் கூற்றுகள் பொய் என்பதை மத்திய உள்துறை அமைச்சக அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. பெண்களின் பாதுகாப்பிற்கு பாஜக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அரசை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தெருவில் இறங்கி போராடும்" என்றார்.

ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் யோகேஷ் ஜத்வானி கூறுகையில், “குஜராத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏராளமாக நடந்துள்ளன. ஆனால், அவை அத்தனையும் காவல் துறையில் புகாரளிக்கப்படவில்லை. மேலும், குற்றவாளிகள் காவல்துறைக்கும், சட்டத்துக்கும் அஞ்சாதபோதுதான் குற்றச்செயல்கள் பெருகும். அது தான் குஜராத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in