மேலும் 44 பேர் அதிமுகவிலிருந்து நீக்கம்: அடுத்தடுத்து ஓபிஎஸ் அதிரடி

மேலும் 44 பேர் அதிமுகவிலிருந்து நீக்கம்: அடுத்தடுத்து ஓபிஎஸ் அதிரடி

பொள்ளாச்சி ஜெயராமன், சி.விஜயபாஸ்கர் உள்பட 44 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணி இரண்டாக உடைந்தது. ஈபிஎஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அவர் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அந்த பொதுக்குழுவிலேயே ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் கொந்தளித்த ஓபிஎஸ், சட்டப்படி இந்த நீக்கம் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, ஓபிஎஸ்சின் மகனும் அதிமுக ஒரே எம்பியுமான ரவீந்திரநாத் குமாரையும், அவரது இரண்டாவது மகன் ஜெயபிரதீப்பையும் கட்சியில் இருந்து நீக்கியதாக ஈபிஎஸ் அறிவித்தார். இதையடுத்து, 18 பேரை கட்சியில் இருந்து நீக்கினார் ஓபிஎஸ். இதில் முக்கியமானவர் எடப்பாடி பழனிசாமி. இப்படி மாறி மாறி அதிமுகவில் அதிரடி காட்சிகள் அரங்கேறி வரும் நிலையில், இன்று மேலும் 44 பேரை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

பொள்ளாச்சி ஜெயராமன், சி.விஜயபாஸ்கர், காமராஜ், பாலகங்கா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உள்பட 44 பேரை நீக்குவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இவர்களுடன் கழக உடன்பிறப்புகள் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in