
தமிழ்நாடு தொல்லியல் துறையினர் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளையும், அடுத்து நடக்க இருக்கும் தொல்லியல் ஆய்வுகள் குறித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப் பேரவையில் அறிவித்தார்.
இது குறித்து சட்டப் பேரவையில் உரையாற்றிய ஸ்டாலின், “கீழடி அகழ்வாய்வில் வெளிப்பட்ட கட்டுமானங்கள், தொல்பொருட்களின் செய்நேர்த்தி, தொழில்நுப்பத்திறன் பொறியியல் நுணுக்கம் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்ததில் சங்ககால தமிழகத்தில் நன்கு முதிர்ச்சி அடைந்த நகரப்பண்பாடு செழித்து வளர்ந்திருந்தது என்பதை நம்மால் உலகுக்கு அளிக்க முடிந்தது. தொடர்ச்சியான ஆய்வுகளின் மூலம் கி.மு. 6-ம் நூற்றாண்டிலேயே தமிழ் எழுத்துக்களின் பயன்பாடு இருந்தது என்பதையும் 3500 ஆண்டுகளுக்கு முன்பே ஆற்றங்கரை நாகரிகம் இருந்தது என்பதையும் உலகுக்குச் சொல்ல முடிந்தது.
கடந்த ஆண்டு தமிழ்நாடு தொல்லியல் துறையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மயிலாடும்பாறை என்ற இடத்தில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. பாறை ஓவியங்கள், புதிய கற்கால கருவிகள் என அரிய வகை தொல்லியல் அடையாளங்களைக் கொண்ட மயிலாடும்பாறை வாழ்விட பகுதியில் 104 செ.மீ. மற்றும் 130 செ.மீ. ஆழத்தில் சேகரிக்கப்பட்ட இரண்டு களிமண் மாதிரிகள், அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா மாகாண பீட்டா பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்த பகுப்பாய்வின் காலக்கணக்கீட்டு முடிவுகள் தற்போது பெறப்பட்டுள்ளன. அவற்றின் சராசரி மைய அளவீட்டுக் காலம் முறையே கி.மு 1015 மற்றும் கி.மு. 2172 என்று காலக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டின் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முன்னரே நிலவி வந்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மனித இனம் இரும்பின் பயனை உணர்ந்த பிறகுதான் அடர்ந்த வனங்களை அழித்து வேளாண்மை செய்திடும் போக்கு உருவாகி இருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் வேளாண்மை சமூகம் தொடங்கிய காலம் குறித்தான கேள்விகளுக்குத் தெளிவான விடை இன்று கிடைத்திருக்கிறது. தமிழக தொல்லியல் ஆய்வு குறித்துத் தலைசிறந்த தொல்லியல் ஆய்வாளர்கள் பாராட்டி இருக்கிறார்கள். தொடர்ந்து தமிழகம் தடம் பதித்த இந்தியாவின் பிறபகுதிகளிலும், கடல்கடந்து வெற்றி கொண்ட நாடுகளிலும் அகழாய்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கேரளாவில் உள்ள பட்டணம், கர்நாடகா உள்ள தலைக்காடு, ஆந்திராவில் உள்ள வெங்கி, ஒடிசாவில் உள்ள பாலூர் உள்ளிட்ட பகுதிகளில் அகழாய்வு செய்யப்படும். சங்ககால துறைமுகமான கொற்கையில் ஆழ்கடலாய்வின் முதற்கட்டமாக முன்கள ஆய்வு இந்த மாதம் தொடங்கப்பட உள்ளது” எனத் தெரிவித்தார்.