
அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 42 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறது.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம் சிகாமணி ஆகியோர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று திடீரென சோதனை நடத்தினர். இரண்டு பேரையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிகாலை 3:30 மணி வரை விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இதன் பின் பொன்முடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். மேலும் ஜூலை 18-ம் தேதி (இன்று) விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தது. அதன்படி பொன்முடி இன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
இந்தநிலையில் அமலாக்கத்துறையை தனது ட்விட்டர் பக்கத்தில், அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 7 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாகவும் சோதனையின்போது 81.7 லட்சம் மற்றும் 13 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 41.9 கோடி நிரந்தர வைப்புத் தொகை முடக்கப்பட்டு இருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இந்தோனேசியா நிறுவனத்தை 41.57 லட்சத்துக்கு வாங்கி, 2022-ல் 100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது என்றும் பொன்முடியின் மகன், உறவினர்கள், பினாமி பெயர்களில் 5 இடங்களில் சட்டவிரோதமாக செம்மண் குவாரிகள் இருந்தன என்றும் இந்தோனேசியா மற்றும் யுஏஇ நிறுவனங்கள் மூலமாக முறைகேடு நடந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.