ரூ.100 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் எங்கே?- மதுரை ஆதீனத்துக்கு எதிராக பகீர் கிளப்பும் 4 கிராம மக்கள்

கோயில் முன்பாக திரண்ட மக்கள்
கோயில் முன்பாக திரண்ட மக்கள்

திமுக அரசுக்கு எதிராக மதுரை ஆதீனம் கண்டன கருத்துக்களை பரப்பி வரும் நிலையில் அவருக்கு பாஜக சார்பில் எம்பி பதவி வழங்கப்படும் என்ற பேச்சும் எழுந்துள்ளது. இந்நிலையில் மதுரை ஆதீனத்தை கண்டித்து மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான சுக்கிரன் தலமான அக்னீஸ்வரர் திருக்கோயில் அமைந்திருக்கும் கஞ்சனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து பொது மக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகேயுள்ள கஞ்சனூரில் கோயிலின் முன்பாக இன்று காலை, துகிலி கிராமம் எம்.பாண்டியன், கஞ்சனூர் கிராமம் கே.முருகன், கோட்டூர் கிராமம் டி.சிங்காரவேல், மணலூர் கிராமம் ஆர்.குமார் ஆகியோர் தலைமையில் 4 கிராம மக்கள் ஒன்று கூடினர்.

மதுரை ஆதீனத்துக்கு எதிராகவும், அவர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதை கண்டித்தும், கோயில் நிர்வாகத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பியும் கோயில் முன்பாக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பொதுமக்கள் சார்பில் கஞ்சனூர் கு.ம.வேல்வேந்தன் கூறுகையில், "கஞ்சனூரிலுள்ள அக்னிஸ்வரர் கோயில் நவக்கிரஹங்களில் ஒன்றான சுக்கிர பகவான் கோயிலாகும். மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான இக்கோயில் துகிலி, கோட்டூர், மணலூர், கஞ்சனூர் ஆகிய 4 கிராமத்துக்குரியதாகும். இக்கோயிலின் பல கோடி நிதியை மறைந்த முன்னாள் ஆதீனமும், தற்போதுள்ள ஆதீனமும் முறைகேடு செய்துள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக கும்பாபிஷேகம் செய்வதற்காக பாலாயம் செய்யப்பட்டது. அதன் பிறகு அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர். இதேபோல், மூலவர் மற்றும் அம்பாள் சுவாமிகளை தவிர மற்ற பிரகாரத்திலுள்ள சுவாமிகளுக்கு அபிஷேகம் உள்ளிட்ட எதுவும் செய்வதில்லை. கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் உள்ளதா என எந்த விவரமும் யாருக்கும் தெரிய வில்லை.

இக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் 2 சதவீதம் விழாக்கள் கூட ஆதீனம் சார்பில் நடத்துவதில்லை. மதுரை ஆதீனம், கடந்த சில நாட்களுக்கு முன், எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள், கொலை செய்து விடுவார்கள் என பேசி, எங்கள் ஊர்க்காரர்கள் மீது தவறான பிரச்சாரம் செய்து வருகிறார். எனவே, தமிழக அரசு, மதுரை ஆதீனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இக்கோயிலை அருகிலுள்ள வேறு மடங்களோ அல்லது அரசே ஏற்று நடத்த வேண்டும். தங்க, வைர நகைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் 4 கிராம மக்கள் திரண்டு, கோயில் முன்பாக காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம்" என தெரிவித்தார்.

மதுரை ஆதீனத்துக்கு எதிராக மக்கள் திரண்டு கண்டனம் தெரிவித்திருப்பதும், போராட்டத்தை அறிவித்திருப்பதும் தமிழகத்தில் புதிய திருப்பமாக அமைந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in