‘மோடியை அகற்று, நாட்டைக் காப்பாற்று’ – டெல்லியை உலுக்கிய ஆயிரக்கணக்கான போஸ்டர்கள்; போலீஸ் அதிரடி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி ‘மோடியை அகற்று, நாட்டைக் காப்பாற்று’ – டெல்லியை உலுக்கிய ஆயிரக்கணக்கான போஸ்டர்கள்; 6 பேர் கைது

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் நேற்று ஒட்டப்பட்டது. இது தொடர்பாக 36 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவர் அச்சகம் வைத்துள்ளனர். ஆம் ஆத்மி தரப்பிலிருந்து இது ஒட்டப்ப்பட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

டெல்லியில் பல இடங்களில் பிரதமர் மோடியை விமர்சித்து ஒட்டப்பட்டிருந்த 2,000 போஸ்டர்களை செவ்வாய்க்கிழமையன்று போலீஸார் அகற்றினர். இந்த போஸ்டர்களின் பெரும்பாலானவற்றில் "மோடி ஹட்டாவோ, தேஷ் பச்சாவோ (மோடியை அகற்று, நாட்டைக் காப்பாற்று)" என்ற இந்தி வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்ததற்காகவும், அச்சகத்தின் பெயர் சுவரொட்டிகளில் இடம்பெற வேண்டும் என்ற சட்டத்தின் கீழும் இது தொடர்பாக 6 கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக 138 எப்ஐஆர் பதிவு செய்துள்ளதாகவும், அதில் 36 எப்ஐஆர் மோடிக்கு எதிரான போஸ்டர்களுக்காக பதிவு செய்யப்பட்டதாகவும் டெல்லி போலீஸார் தெரிவித்தனர். மேலும், ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட 2,000 போஸ்டர்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. மத்திய டெல்லியில் உள்ள ஐபி எஸ்டேட் பகுதியில் ஒரு வேனை மறித்து சோதனையிட்ட போது அந்த சுவரொட்டிகளை போலீஸார் கண்டுபிடித்தனர்.

போஸ்டர்களில் ஆட்சேபனைக்குரிய கருத்து என்ன உள்ளது என்று ஆம் ஆத்மி கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. மேலும், இது தொடர்பான கைது நடவடிக்கை என்பது ‘மோடி அரசின் சர்வாதிகாரத்தின் உச்சம்’ என்றும் அக்கட்சி கூறியது. பிரதமர் மோடியை விமர்சிக்கும் 50,000 போஸ்டர்களை அச்சிட ஆர்டர் கிடைத்ததாக கைது செய்யப்பட்ட அச்சக உரிமையாளர்கள் டெல்லி காவல்துறையிடம் தெரிவித்தனர். சுவரொட்டிகளில் அச்சகத்தின் பெயர் இல்லாததால் 2 அச்சக உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே, நேற்று டெல்லி பட்ஜெட்டை தாக்கல் செய்யவிடாமல் மத்திய அரசு முட்டுக்கட்டைப் போடுவதாக ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்த நிலையில், தற்போதைய போஸ்டர் யுத்தம், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையேயான சமீபத்திய ஃப்ளாஷ் புள்ளியாக மாறியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in