தென்காசி அருகே பேருந்தில் பறக்கும் படை சோதனை... கட்டுக் கட்டாக சிக்கிய ரூ.35 லட்சம்!

தேர்தலை முன்னிட்டு நடைபெறும் வாகனச் சோதனை
தேர்தலை முன்னிட்டு நடைபெறும் வாகனச் சோதனை

தென்காசி அருகே பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 35 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல்  பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

அதிகாரிகள் சோதனை
அதிகாரிகள் சோதனை

தமிழ்நாட்டில் எதிர்வரும் 19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த ஐந்து நாட்களாக அமலில் உள்ளன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பல்வேறு பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பு வாகனத் தணிக்கையில் மற்றும் சோதனைகள் நடத்தப்பட்டு கடத்தல் பொருட்கள் தடுக்கப்படுகிறது.  அவ்வகையில் விழுப்புரத்தில்  உரிய ஆவணங்களின்றி நேற்று கொண்டு செல்லப்பட்ட 30 லட்சம்,  வேலூரில் 5 லட்சம்,  ஈரோட்டில் 2 லட்சத்து 40 ஆயிரம், தூத்துக்குடியில் ஒரு லட்சம் ரூபாய் பணம். ஆகியவை தேர்தல் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தென்காசி அருகே பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 35 லட்சம் ரூபாய் பணத்தை இன்று அதிகாலை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.  தென்காசி அருகே குத்துக்கல் வலசை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த  பேருந்தை நிறுத்தி  பயணிகளின் உடமைகளை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர். 

அப்போது ஒரு பயணி ஒருவரிடம் கட்டுக் கட்டாக பணம் இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து பயணியையும் பையையும் பேருந்திலிருந்து  இறக்கி  அதிகாரிகள் தங்கள் அலுவலகத்திற்கு கொண்டு சென்று சோதனை செய்தனர்.  அதில் 35 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரிய வந்தது. நகைத் தொழில் செய்யும் செய்யது அலி என்ற அந்த நபர் உரிய ஆவணங்களின்றி பணத்தை கொண்டு சென்றதால் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.  மேலும் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in