திருக்காக்கரைத் தொகுதியை கைப்பற்ற துடிக்கும் காங்கிரஸ்: ராகுல் அதிரடி திட்டம்

திருக்காக்கரைத் தொகுதியை கைப்பற்ற துடிக்கும் காங்கிரஸ்: ராகுல் அதிரடி திட்டம்
பி.டி.தாமஸ்

கேரள மாநிலத்தின் திருகாக்கரைத் தொகுதி எம்எல்ஏவும், கேரள மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான பி.டி.தாமஸ் (70) அண்மையில் காலமானார். அவரது திருக்காக்கரைத் தொகுதிக்கு வரும் 31-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் காங்கிரஸ் இந்த இடைத்தேர்தலில் வாகை சூடுமா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளின் போது சமரசமற்ற போராட்டத்தை முன்னெடுத்த பி.டி.தாமஸ், 2 புத்தகங்களும் எழுதியுள்ளார். முன்னாள் எம்பி, சிட்டிங் எம்எல்ஏ ஆகிய பதவிகளைக் கொண்டிருந்த தாமஸ், கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அண்மையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எர்ணாக்குளம், மகாராஜா கல்லூரியில் படித்தபோதே கல்லூரி மாணவர் பேரவைத் தலைவராக இருந்தார் தாமஸ். கடந்த 2009-ம் ஆண்டு இடுக்கி நாடாளுமன்றத் தொகுதியில் 74 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடியிருந்தார் பி.டி.தாமஸ். தொடர்ந்து 2014-ம் ஆண்டிலும் அவருக்கே சீட் கொடுக்க கட்சி தயாரானது. அப்போது தாமஸ், மேற்குத் தொடர்ச்சி மலை குறித்து கஸ்தூரி ரங்கனுக்கும் முன்பே அமைக்கப்பட்ட காட்கில் கமிட்டியை ஆதரித்தது சர்ச்சையைக் கிளப்பியது. காங்கிரஸ் கட்சியே காட்கில் கமிட்டியை நிராகரித்தபோதும் பி.டி.தாமஸ் அதில் உறுதியாக இருந்தார். இதனாலேயே இடுக்கியில் இருக்கும் சீரோ மலபார் சபைக்கும், பி.டி.தாமஸுக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டது. இதனால் தாமஸுக்கு திருச்சபை எதிர்ப்பு காட்டவே, தேசிய அரசியலில் இருந்து மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்பினார்.

மரணத்திலும் கேரள பாசம்!..

தாமஸ், கல்லூரித் தோழியான உஷா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்தவர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டதில் இருந்தே தன் இறப்பை எதிர்நோக்கியிருந்த தாமஸ், ‘தன் உடலை புதைப்பதற்குப் பதில் எரிக்க வேண்டும். என் சாம்பலை என் அம்மாவின் கல்லறையில் வைக்கவேண்டும். எந்த மத சடங்குகளும் இல்லாமல் என் இறுதிச்சடங்கு நடைபெறவேண்டும்’ எனவும் கேட்டிருந்தார். இதேபோல், அவரது கண்களையும் தானம் செய்திருந்தார்.

வயலார் ராமவர்மா எழுதிய ‘சந்திரகலபம்’ எனத் தொடங்கும் பாடலை, தன் உடலை எரியூட்டும் போது இசைக்க வேண்டும் எனவும் கேட்டிருந்தார் தாமஸ். ‘எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மீண்டும் கேரளத்தில் வந்து பிறக்கவேண்டும்’ என்பதே இந்தப்பாடலின் மையக்கரு. 1991 முதல் 2001 வரை தொடுபுழா தொகுதி எம்எல்ஏவாகவும், இப்போது இரண்டாவது முறையாக திருகாக்கரை தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்துவந்தார் பி.டி.தாமஸ். அவரது மறைவைத் தொடர்ந்து திருக்காக்கரை தொகுதிக்கு வரும் 31-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 3-ம் தேதி நடக்க உள்ளது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

நாளை முதல் வரும் 11 -ம் தேதிவரை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம். கடந்தத் தேர்தலில் இங்கு காங்கிரஸ் கட்சி 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடியது. அதேநேரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியோ, மீண்டும் முதல்வராக வாகைசூடிய பினராயி விஜயனின் அரசின் எடைத்தேர்தலாகவே, இந்த இடைத்தேர்தலை அணுகுகிறது. இதனால் சக்திவாய்ந்த வேட்பாளரை நிறுத்த மார்க்சிஸ்ட் தரப்பும் முறுக்கிக் கொண்டு நிற்கிறது. கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் `2020 கட்சி' தனியாகத் தேர்தலை சந்தித்தது. அப்போதே அந்தக் கட்சி 13 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. இப்போது `2020 கட்சி', ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்துள்ளது. இதனால் அந்தக் கட்சியும் முந்தைய தேர்தலைவிட கூடுதல் வாக்குகளைப் பெற வாய்ப்பு அதிகம். இப்படியான சூழலில் காங்கிரஸ்- மார்க்சிஸ்ட் இடையே இந்தத் தொகுதியைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது. வயலாறு தொகுதியின் எம்.பியும், காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவருமான ராகுல்காந்தி, கேரள மாநில காங்கிரஸாரிடம் தங்கள் வசம் இருந்த திருக்காக்கரைத் தொகுதியைக் கைப்பற்ற தீவிரக் களப்பணி ஆற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.