ஓங்கியது தேஜஸ்வி யாதவின் கை: பிஹாரில் 31 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

ஓங்கியது தேஜஸ்வி யாதவின் கை: பிஹாரில் 31 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைந்த பின்னர், நிதிஷ் குமார் தலைமையிலான அரசில் இன்று புதிதாக 31 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று தனது அமைச்சரவையை விரிவுபடுத்தினார். இந்த விரிவாக்கத்தில் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிக்கு அதிக அமைச்சரவை இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் பகு சௌகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பிஹார் அமைச்சரவையில் மொத்தம் 31 அமைச்சர்கள் இன்று இடம்பெற்றுள்ளனர். இதில் ஆர்ஜேடிக்கு 16 அமைச்சர் பதவிகளும், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 11 அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு இரண்டு அமைச்சர்களும், ஜிதன் ராம் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ஒரு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. சுயேச்சை எம்.எல்.ஏ சுமித் குமார் சிங்கும் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முகமது ஜமா கான், ஜெயந்த் ராஜ், ஷீலா குமாரி, சுனில் குமார், சஞ்சய் ஜா, மதன் சாஹ்னி, ஷ்ரவன் குமார், அசோக் சவுத்ரி, லெஷி சிங், விஜய் குமார் சவுத்ரி மற்றும் பிஜேந்திர யாதவ் ஆகியோருக்கு மீண்டும் நிதிஷ்குமார் வாய்ப்பளித்துள்ளார்

ஆர்ஜேடியில் இருந்து தேஜஸ்வி யாதவின் சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ், அலோக் மேத்தா, சுரேந்திர பிரசாத் யாதவ் மற்றும் ராமானந்த் யாதவ், குமார் சர்வஜீத், லலித் யாதவ், சமீர் குமார் மஹாசேத், சந்திரசேகர், ஜிதேந்திர குமார் ராய், அனிதா தேவி மற்றும் சுதாகர் சிங், இஸ்ரேல் மன்சூரி, சுரேந்திர சிங், கார்த்திகேயா , ஷாநவாஸ் ஆலம், ஷமிம் அகமது ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

காங்கிரஸ் சார்பில் அஃபாக் ஆலம் மற்றும் முராரி லால் கௌதம் ஆகியோர் அமைச்சர்களாகியுள்ளனர். சந்தோஷ் சுமன் இந்துஸ்தானி அவம் மோர்ச்சாவிலிருந்து பதவியேற்றுள்ளார்.

இந்த அமைச்சரவை விரிவாக்கத்தின்போது முதல்வர் நிதிஷ்குமார் உள்துறையை தன்வசம் வைத்துக்கொண்டார். துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் சுகாதாரத்துறையை கைப்பற்றியுள்ளார். தேஜஸ்வியின் சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார். வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி பிஹார் சட்டசபையில் புதிய அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in