வேட்பாளர்களுக்கு ‘30 நாள் கெடு’ : மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

வேட்பாளர்களுக்கு ‘30 நாள் கெடு’ : மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
தமிழக மாநில தேர்தல் ஆணையம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், 30 நாட்களுக்குள் செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்தவிதமான தேர்தலிலும் போட்டியிட முடியாது என்றும் மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு கடந்த 19-ம் தேதி நடந்த தேர்தலில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அபார வெற்றி பெற்றன. பல வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர். தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மார்ச் 2-ம் தேதி காலை பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்கிறார்கள். மார்ச் 4-ம் தேதி காலை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலும், மதியம் துணை மேயருக்கான தேர்தலும் நடைபெறுகிறது.

இந்நிலையில், தேர்தலில் போட்டியிட்டவர்கள், போட்டியின்றி தேர்வான வேட்பாளர்கள் அனைவரும் தங்களின் செலவுக் கணக்கை, அடுத்த 30 நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கணக்குகளை சரியாகத் தாக்கல் செய்யாத வேட்பாளர்கள், அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்தவிதமான தேர்தலிலும் போட்டியிட முடியாது என்றும் தாக்கல் செய்யாதவர்கள் மீது, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மாநகராட்சிகளில் திமுக 43.59% வாக்குகளும், நகராட்சிகளில் 43.49% வாக்குகளும், பேரூராட்சிகளில் 41.91% வாக்குகளும் பெற்று முதலிடத்தில் உள்ளது. அதிமுக மாநகராட்சிகளில் 24% வாக்குகளும், நகராட்சிகளில் 26.86% வாக்குகளும், பேரூராட்சிகளில் 25.56% வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

அடுத்ததாக பாஜக மாநகராட்சிகளில் 7.17% வாக்குகளும், நகராட்சிகளில் 3.31% வாக்குகளும், பேரூராட்சிகளில் 4.30% வாக்குகளும் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. காங்கிரஸ் கட்சி மாநகராட்சிகளில் 3.16% வாக்குகளும், நகராட்சிகளில் 3.04% வாக்குகளும், பேரூராட்சிகளில் 3.85% வாக்குகளை பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

Related Stories

No stories found.