வடகிழக்கு முடிவுகள்: அடுத்து என்ன செய்யப் போகிறது காங்கிரஸ்?

ராகுல், மோடி
ராகுல், மோடி3 மாநிலத் தேர்தல் முடிவுகளால் உற்சாகத்தில் பாஜக...

வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தல்களில், அந்தந்த மாநில ஆளும் கட்சிகளே மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துள்ளன. இந்தத் தேர்தல்கள் மூலமாக பாஜக உற்சாகமாக அடுத்தடுத்தகட்ட தேர்தல்களுக்குத் தயாராகி விட்டது. அதேசமயம், தொடரும் தோல்விகளால் காங்கிரஸ் துவண்டு கிடக்கிறது.

இந்த ஆண்டில் மொத்தம் 9 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, இந்த 3 மாநிலத் தேர்தல் வெற்றி என்பது அடுத்தடுத்த தேர்தல்களுக்கு உத்வேகம் கொடுக்கும் என பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் கணக்குப் போட்டன.

திரிபுராவில் தோல்வியடைந்த சிபிஎம்-காங்கிரஸ் கூட்டணி!

திரிபுராவில் பாஜக 32 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான ஐஎஃப்பிடி ஒரு இடத்திலும் வென்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 31 என்ற எண்ணிக்கையைத் தாண்டியுள்ளதால் பாஜகவே மீண்டும் ஆட்சியமைக்கிறது. அதேசமயம், திரிபுராவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இடதுசாரிகள்-காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. சிபிஎம் 11 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சிக்கு எதிரான மனநிலை, புதிய கூட்டணி ஆகியவை நிச்சயமாக கைக்கொடுக்கும் என்று இரு கட்சிகளும் நம்பியது, ஆனால் அது நடக்கவில்லை.

இந்தக் கூட்டணியின் தோல்விக்கு மற்றொரு முக்கிய காரணமும் கூறப்படுகிறது. இக்கூட்டணி அறிவிப்பு முதல், தொகுதி பங்கீட்டிலிருந்து, வேட்புமனு வாபஸ் பெறும் கடைசி நாள் வரை சிபிஎம் - காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்தது. எனவே, இரு கட்சிகளின் தொண்டர்களும் ஒருமித்து வேலை செய்யவில்லை. இந்த இரு கட்சிகளுக்கிடையே நிலவிய பிணக்குகளால், இவர்களை மக்களும் முழுமையாக நம்பவில்லை என்பதும் தேர்தல் முடிவுகள் மூலமாக உறுதியாகியுள்ளது. இரு கட்சிகளும் ஆரம்பம் முதலே முழுவீச்சில் உழைத்திருந்தால், வெற்றிக்கோட்டினை தொட்டிருக்கலாம் என்கிறார்கள்.

பிரத்யோக் பிக்ரம் மாணிக்ய தேப் பர்மா
பிரத்யோக் பிக்ரம் மாணிக்ய தேப் பர்மா

‘கிரேட்டர் திப்ராலாந்து’ என்ற தனிமாநிலக் கோரிக்கையுடன் திரிபுராவில் இந்த தேர்தலில் முதன்முறையாக களம் கண்ட திப்ரா மோதா கட்சி தற்போது 13 இடங்களில் வெற்றிபெற்று, முதன்மையான எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன்புதான் காங்கிரஸிலிருந்து விலகி திரிபுரா அரசக் குடும்பத்தைச் சேர்ந்த பிரத்யோத் பிக்ரம் மாணிக்ய தேப் பர்மா இக்கட்சியைத் தொடங்கினார்.

இத்தேர்தலில் சிபிஎம் - காங்கிரஸ் கூட்டணிக்கு செல்லவேண்டிய பழங்குடியின வாக்குவங்கியை தன்பக்கம் ஈர்த்துள்ளது திப்ரா மோதா கட்சி. இத்தேர்தலில் பாஜக 39 சதவீத வாக்குகளையும், சிபிஎம்-காங்கிரஸ் கூட்டணி 33 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. திப்ரா மோதா கட்சி 20 சதவீத வாக்குகளைப் பெற்று இடதுசாரிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.

மேகாலயாவில் காங்கிரஸுக்கு அதிர்ச்சி!

மேகாலயாவில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை. ஆனால், ஆளும் தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு அடுத்ததாக தேசிய ஜனநாயக கட்சி எனப்படும் யுடிபி 11 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. வாய்ஸ் ஆப் தி பீப்பிள் பார்ட்டி 4 தொகுதிகளிலும், பாஜக 2 தொகுதிகளிலும், பிடிஎஃப் 2 தொகுதிகளிலும், ஹில் ஸ்டேட் பீப்பிள் டெமாக்கரட்டிக் பார்ட்டி 2 தொகுதிகளிலும், சுயேட்சைகள் 2 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளனர். இந்த சூழலில், 26 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தற்போதைய முதல்வர் கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சி தலைமையில் மேகாலயாவில் கூட்டணி ஆட்சியமைகிறது. இதற்கு பாஜகவும் ஆதரவளித்துள்ளது.

கான்ராட் சங்மா
கான்ராட் சங்மா

கடந்த 2018 மேகாலயா தேர்தலில் 21 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், காங்கிரஸிலிருந்து பல எம்எல்ஏ-க்களை தன்பக்கம் இழுத்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியாலும் 5 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. மேகாலயாவில் எந்தக்கட்சியும் தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை அமைக்காமல் தனித்தே களம் கண்டன. ஆளும் என்பிபி கட்சி தனது பழங்குடியின வாக்கு வங்கியை பலப்படுத்தி வைத்துள்ளது. அதேபோல யுடிபி கட்சிக்கும் பழங்குடியின வாக்குகள் சென்றுள்ளது, புதிய கட்சியான வாய்ஸ் ஆப் தி பீப்பிள் பார்ட்டிக்கும் ஆதரவு கிடைத்துள்ளது.

ஆனால், காங்கிரஸ், பாஜக, திரிணமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகளை மேகாலயா மக்கள் நிராகரித்துள்ளனர் என்பதையும் தேர்தல் முடிவுகள் தெளிவாக காட்டுகிறது. காங்கிரஸ் கடந்த தேர்தல் வரை மேகாலயாவில் பலமாகவே இருந்தது. ஆனால் 2018ல், 21 எம்எல்ஏ-க்களை வென்றும் அக்கட்சியால் ஆட்சியமைக்க முடியாமல் போனது, கட்சியினர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அதிருப்தியை உருவாக்கியது. எனவேதான் அக்கட்சியில் இருந்த 21 எம்எல்ஏ-க்களும் 5 வருடங்களுக்குள் மாற்றுக் கட்சிகளுக்கு பறந்துவிட்டனர். முக்கியமாக, இந்த தேர்தலுக்காக ராகுல் காந்தி ஒருமுறை மட்டுமே பிரச்சாரத்துக்கு வந்தார், உயர்மட்ட தலைவர்கள் தீவிர பரப்புரை செய்திருந்தால் இன்னும் சில தொகுதிகளில் வென்றிருக்கலாம் என்பது உள்ளூர் காங்கிரஸாரின் குமுறலாக உள்ளது.

அதேபோல மேகாலயாவில் இம்முறை திரிணமூல் காங்கிரஸ் சரிபாதியாக காங்கிரஸின் வாக்குகளை பிரித்துவிட்டது. ஒருவேளை, இருகட்சிகளும் கைகோத்திருந்தால் வெற்றியின் விளிம்பைத் தொட்டிருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது. இந்த தேர்தலில் என்பிபி 31.49 சதவீத வாக்குகளையும், யுடிபி 16.21 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் 13.78 சதவீதம், காங்கிரஸ் 13.14 சதவீதம், பாஜக 9.33 சதவீதம் வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

நெய்பியூ ரியோ
நெய்பியூ ரியோ

நாகாலாந்தில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி!

60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்தில் ஆளும் என்டிபிபி-பாஜக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக 12 தொகுதிகளிலும், என்டிபிபி கட்சி 25 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. இதனால் என்டிபிபி தலைவர் நெய்பியூ ரியோ 5-வது முறையாக முதல்வராகிறார்.

நாகாலாந்தில் கடந்த முறை எதிர்க்கட்சிகளே இல்லாத சட்டசபை அமைந்தது. இம்முறை பல தேசிய கட்சிகள் இங்கே பிரநிதித்துவம் பெற்றுள்ளன. நாகாலாந்தின் முக்கிய எதிர்க்கட்சியாக 7 தொகுதிகளில் வென்றுள்ள தேசியவாத காங்கிரஸ் உருவெடுத்துள்ளது. தேசிய மக்கள் கட்சி 5 தொகுதியிலும், குடியரசுக் கட்சி (அத்வாலே) 2 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் ஒரு தொகுதியிலும், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சி 2 தொகுதியிலும், நாகா மக்கள் முன்னணி 2 தொகுதியிலும், சுயேட்சைகள் 4 தொகுதிகளிலும் வென்றுள்ளனர்.

இங்கு 23 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியால், மாநிலத்தில் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை. நாகாலாந்தில் 2003 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, அதன்பின்னர் படிப்படியாக வீழ்ச்சியடைய தொடங்கியது, கடந்த 2 தேர்தல்களிலும் அக்கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மூன்று மாநிலத் தேர்தல்கள் காட்டும் திசை!

இந்த 3 மாநிலத் தேர்தல்களில் பாஜகவின் கணக்கு பக்காவாக பலித்துள்ளது. திரிபுராவில் மீண்டும் துளிர்த்தெழுந்த சிபிஎம்-காங்கிரஸ் எழுச்சியை திப்ரா மோதா உடைக்கும் என்ற பாஜகவின் நம்பிக்கை உண்மையாகியிருக்கிறது. அதேபோல மேகாலயாவில் என்பிபியுடன் கூட்டணி அமைக்காமல், அனைத்துக் கட்சிகளையும் தனித்தனியாக போட்டியிடச் செய்த பாஜகவின் வியூகத்தால், அம்மாநிலத்தில் காங்கிரஸும் வீழ்ந்துவிட்டது. மூன்று மாநிலத் தேர்தல் மூலமாக வடகிழக்கு மாநிலங்களில் தனது இடத்தை உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது பாஜக. இதன் மூலம், அடுத்து வரும் 6 மாநிலத் தேர்தல்களையும் உத்வேகத்துடன் எதிர்கொள்ளும் வியூகங்களை அக்கட்சி வகுத்து வருகிறது.

அமித் ஷா - மோடி
அமித் ஷா - மோடி

திரிணமூல் காங்கிரஸ் கட்சி வங்கமொழி பேசும் மக்கள் அதிகம் வாழும் திரிபுராவில் எப்படியும் சில தொகுதிகளையாவது வெல்ல வேண்டும் என கணக்குப்போட்டது. ஆனால், அக்கட்சியால் அங்கே ஒரு சதவீத வாக்குகளைக் கூட பெறமுடியவில்லை. மேகாலயாவில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பலரை கவர்ந்திழுத்தும் 5 இடங்களுக்கு மேல் வெல்லமுடியவில்லை. எனவே இந்த தேர்தல் முடிவுகளால் மம்தா படு அப்செட்டில் இருக்கிறார். முக்கியமாக, மேற்குவங்கத்தின் சாகர்திகி தொகுதி இடைத்தேர்தலில், சிபிஎம் ஆதரவுடன் களமிறங்கிய காங்கிரஸ் கட்சி, திரிணமூல் காங்கிரஸை தோற்கடித்துள்ளது. இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற மம்தா, “2024 மக்களவைத் தேர்தலில் தனித்தே போட்டியிடுவோம்” என்று அறிவித்து கூட்டணிக்கான கதவுகளை இறுக்கமாக மூடிவிட்டார்.

3 மாநிலங்களில் 180 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 8 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. ஒரு காலத்தில் ஆட்சியில் இருந்த இம்மூன்று மாநிலங்களில் காங்கிரஸின் நிலை இப்போது இதுதான். ஆனால், திரிபுராவில் காங்கிரஸிலிருந்து பிரிந்து உருவான திப்ரா மோதா கட்சி முக்கிய எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. மேகாலயாவில் காங்கிரஸ் வாக்குகளை திரிணமூல் கவர்ந்துவிட்டது. நாகாலாந்தில் தேசியவாத காங்கிரஸ் கவனிக்கத்தக்க வெற்றியைப் பெறுகிறது. ஆனால் காங்கிரஸால் இந்த தேர்தல்களில் பிரதான பங்கை வகிக்க முடியவில்லை.

திரிபுராவில் சிபிஎம்- காங்கிரஸ் கூட்டணி முக்கிய தேர்தல் வியூகமாக பார்க்கப்பட்டது. ஆனால், அதுவும் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த சூழலில் காங்கிரஸ் கட்சி அடுத்து என்னதான் செய்யலாம் என்று தெரியாத திக்கற்ற நிலையில் நிற்கிறது. பாரத் ஜோடோ யாத்திரையின் எழுச்சி ஓரளவாவது இந்த 3 மாநிலத் தேர்தல்களில் எதிரொலிக்கும் என காங்கிரஸ் நம்பியது. ஆனால் அதன் கனவுகளையெல்லாம் சிதைத்துப் போட்டுள்ளது தேர்தல் முடிவுகள். 3 மாநிலத் தேர்தலால் மம்தாவின் தீராப்பகையையும் காங்கிரஸ் சம்பாதித்துள்ளது. இது, வரும் மக்களவைத் தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சோனியா காந்தி மல்லிகார்ஜுன கார்கே ராகுல் காந்தி
சோனியா காந்தி மல்லிகார்ஜுன கார்கே ராகுல் காந்தி

இந்த ஆண்டு பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, மணிப்பூர் ஆகியவை காங்கிரஸ் பலமாக உள்ள மாநிலங்கள்தான். திரிபுராவில் திப்ரா மோதா, மேகாலயாவில் திரிணமூல் போல, இந்த 6 மாநிலங்களிலும் காங்கிரஸுக்கு 3-வது எதிரியை உருவாக்கும் வழக்கமான ஃபார்முலாவை பாஜக பயன்படுத்தும். அதுவும் சரிவராது என நினைத்தால் புதுப்புது அஸ்திரங்களும் பாஜகவின் வசம் உள்ளது. ஆனால், காங்கிரஸ் கைவசம் வெற்றிக்கான எந்த வியூகங்களும் இல்லை. தேசிய அளவில் நடைபயணம் சென்றால், உள்ளூர்களில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என காங்கிரஸ் நினைக்கிறது. ஆனால், நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள பூத் கமிட்டிகளிலும் கால் பதிக்கும் வேலைகளை கச்சிதமாக செய்கிறது பாஜக. இதுதான் இருகட்சிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம்.

நாடெங்கும் பாஜகவின் முகமாக மோடி இருக்கிறார். இந்தியாவின் கடைக்கோடி கிராமம் வரை மோடிக்கென்று வாக்குகள் விழுகின்றன. கட்சியினரும் அவரை முழுமையாக நம்புகின்றனர். ஆனால், காங்கிரஸுக்கு இப்போது வலுவான தலைமையும் இல்லை. முன்னிறுத்தப்படும் முகமும் இல்லை என்ற விமர்சனம் அக்கட்சியினர் மத்தியிலேயே உள்ளது.

மாநில காங்கிரஸ் தலைவர்கள் எல்லாம் கோஷ்டி பூசல்களில் பிஸியாக உள்ளனர். இதையெல்லாம் சரிசெய்யாவிட்டால் 6 மாநில தேர்தல்களிலும் காங்கிரஸுக்கு அவ்வளவு எளிதாக சாதகம் கிடைத்துவிடாது. அதற்கான எச்சரிக்கை மணிதான் இந்த 3 மாநிலத் தேர்தல் முடிவுகள். இதைச் சரிசெய்யாவிட்டால், அதன் தாக்கம் அடுத்து வரும் பேரவைத் தேர்தல்களில் மட்டுமல்லாது மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in