முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 3 தனிப்படைகள்

முன்ஜாமீன் மனு தள்ளுபடியானதால் காவல் துறை தீவிரம்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 3 தனிப்படைகள்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்தபோது ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைவாங்கித் தருவதாக, ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குத் தொடரப்பட்டது.

விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் கடந்த மாதம் 18-ம் தேதி வழக்குப் பதிவு செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து முன்ஜாமீன் கேட்டு, ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

பணமோசடி தொடர்பான வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அதைத் தள்ளுபடி செய்தது.

அப்போது ராஜேந்திர பாலாஜி தரப்பில், தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளதால், தள்ளுபடி உத்தரவை 2 வாரங்களுக்கு நிறுத்திவைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த புகார்களில் தண்டனையை நிறுத்தி வைப்பதில்லை எனக் கூறி ராஜேந்திர பாலாஜி கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜியை கைதுசெய்ய விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தனிப்படை திருச்சி பகுதியிலும், மற்ற இரு படைகள் விருதுநகர் மாவட்டத்தின் உட்பகுதியிலும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைத் தேடிவருவதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in