ஒரே நேரத்தில் போலீஸாக தேர்வான 3 சகோதரிகள்: கனிமொழி எம்.பி போனில் வாழ்த்து

ஒரே நேரத்தில் போலீஸாக தேர்வான  3 சகோதரிகள்: கனிமொழி எம்.பி போனில் வாழ்த்து

ஒரே நேரத்தில் காவல் துறையில் தேர்வாகியுள்ள அக்கா, தங்கைகள் மூன்று பேருக்கும் திமுக துணைப்பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தொலைபேசியில் வாழ்த்துதெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ்ஆவதம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்- ஷகிலா தம்பதியர். இவர்களுக்கு ப்ரீத்தி, வைஷ்ணவி, நிரஞ்சனி என்ற மூன்று மகள்கள் உள்ளனர். வெங்கடேசன் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். மூத்த மகள் ப்ரீத்திக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இளம் வயதிலிருந்தே சகோதரிகள் மூன்று பேரும் போலீஸில் சேர வேண்டுமென உறுதியாக இருந்து வந்தனர். அதற்காக கடுமையான பயிற்சியை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இரண்டாம் நிலை காவலர் தேர்வில் சகோதரிகள் மூவரும் கலந்து கொண்டு தேர்வில் மூவரும் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் மூன்று சகோதரிகளும் பொன்னேரி பகுதியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்து ஊர் திரும்பினர். அவர்களுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தந்தை வெங்கடேசன், " பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது. ஆனால் தேர்வில் தோல்வியடைந்ததால் போலீஸில் சேர முடியவில்லை. எனது கஷ்டத்தைச் சொல்லி எனது குழந்தைகளை வளர்த்து வந்தேன். அவர்கள் போலீஸாக வேண்டும் என உறுதியாக இருந்தனர். அதற்காக தீவிரமாகப் பயிற்சி செய்து வந்தனர். எங்களின் விவசாய நிலத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்தனர், இந்நிலையில்தான் அவர்கள் மூவரும் காவலர்களாக தேர்வாகியுள்ளனர். என் மகள்களின் மூலம் எனது ஆசை நிறைவேறியுள்ளது" என்று கூறினார்.

இந்த செய்தி அறிந்த திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி அலைபேசி வாயிலாக வைஷ்ணவியை தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அதற்கு வைஷ்ணவி, தனக்கு வாழ்த்து தெரிவித்த முதல் அரசியல் தலைவர் கனிமொழி தான் என கூறி நன்றி தெரிவித்தார். வைஷ்ணவி, நிரஞ்சனி மற்றும் ப்ரீத்தி ஆகிய மூன்று சகோதரிகளும் திருவள்ளூர் காவல் பயிற்சியை முடித்துள்ள நிலையில், விரைவில் காவல் பணியில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in