உருட்டுக் கட்டைகளால் மூன்று பேருக்கு மண்டை உடைப்பு: கோஷ்டி பூசலால் களேபரமான சத்தியமூர்த்தி பவன்!

உருட்டுக் கட்டைகளால் மூன்று பேருக்கு மண்டை உடைப்பு: கோஷ்டி பூசலால் களேபரமான சத்தியமூர்த்தி பவன்!

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இருதரப்பினருக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி பூசலின் காரணமாக ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. கே.எஸ். அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக மேலிடப் பொறுப்பாளர் குண்டு ராவ், காங்கிரஸ் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். அப்போது திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே ஜெயக்குமார், நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட 8 ஒன்றிய தலைவர்களைக் காரணம் இல்லாமல், பதவி நீக்கம் செய்துள்ளதாகவும், அவரின் ஆதரவாளர்களை புதிய நிர்வாகிகளாக நியமித்துள்ளதாகவும் குற்றம்சாட்டி நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தலைமையில் கூட்டத்திற்கு வந்த கே. எஸ். அழகிரி,  குண்டு ராவ் ஆகியோரை முற்றுகையிட்டனர்.

மூத்த நிர்வாகிகள் கூட்டம் முடிந்த பிறகு இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதாக குண்டுராவ் மற்றும் அழகிரி உறுதியளித்தனர். ஆனால் கூட்டம் முடிந்து வெளியே வந்த அவர்கள் இதுகுறித்து எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்ப முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள் அழகிரியின் காரை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ரூபி மனோகரனின் ஆதரவாளர்களுக்கும், ஜெயக்குமாரின் ஆதரவாளர்களுக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிக் கைகலப்பாக மாறியது. இருதரப்பினரும் உருட்டுக் கட்டைகளால் தாக்கி மோதலில் ஈடுபட்டனர். இதனால் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் மூன்று பேருக்கு மண்டை உடைந்து ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in