
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் இன்று சந்தித்தார்.
சர்வதேச மகளிர் 50 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றவர் மிதாலி ராஜ். இந்தியாவிற்காக 232 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 7,805 ரன்களை அவர் குவித்துள்ளார். அவரின் சாராசரி மட்டும் 50.68 ரன்கள் ஆகும். கிரிக்கெட் உலகில் அதிரடி ஆட்டக்காரரான மித்தாலி கடந்த ஜீன் 8-ம் தேதி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் திடீரென அறிவித்தார்.
அப்போது அவர் ட்விட்டரில் வெளியிட்ட அறிக்கையில், "அனைத்து பயணங்களும் ஒருநாள் முடிவுக்கு வரும். அந்தவகையில் இன்று நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் நாளாகும். எனக்கு ஆதரவுக்கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றிகள். என் வாழ்க்கையின் 2-வது இன்னிங்ஸை ஆட உங்களது ஆசீர்வாதம் வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த நிலையில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை மிதாலி ராஜ் இன்று திடீரென சந்தித்தார். அவர் ஏற்கெனவே கூறிய 2-வது இன்னிங்ஸ் அரசியலாக இருக்கும் என்றும், அவர் பாஜகவில் சேருவார் என்றும் சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.