சென்னையில் வாழத் தகுதியற்ற நிலையில் 27,538 வீடுகள்: அதிர்ச்சி அளிக்கும் அமைச்சரின் அறிக்கை!

சென்னையில் வாழத் தகுதியற்ற நிலையில் 27,538 வீடுகள்: அதிர்ச்சி அளிக்கும் அமைச்சரின் அறிக்கை!

சென்னையில் 27,538 குடிசைப் பகுதி மாற்று வீடுகள் மக்கள் வாழத் தகுதியற்றவையாக இருப்பதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.

குறு, சிறு  மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மறுக்கட்டுமான திட்டத்தின் கீழ் ஆன்டிமானிய தோட்டர், வன்னியபுரம், டாக்டர் தாமஸ் சாலை, கருமாங்குளம், காராஜ் காலனி, லலிதாபுரம் உள்ளிட்ட பகுதிகளை நேற்று பார்வையிட்டார். இந்த ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடிசை பகுதி மாற்று வாரிய வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு மறுகட்டுமான காலங்களில் வெளியே வாடகையில் தங்குவதற்குக் கடந்த கால ஆட்சியில் 8,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகை தற்போது 24,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் தொகையை மறுக்கட்டுமானம் செய்யப்பட்டுள்ள குடியிருப்பு தாரர்களுக்கு படிப்படியாக வழங்கி வருகிறோம். சென்னையில் மட்டும் 27,538 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மக்கள் வசிக்கத் தகுதியற்ற வீடுகளாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதையறிந்த முதல்வர் ஸ்டாலின் மக்கள் வசிப்பதற்குத் தகுதியற்ற வீடுகளை இடித்துவிட்டு அதே பகுதியில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டித் தரவேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

அந்த அடிப்படையில் கடந்த நிதி நிலை அறிக்கையில் அறிவித்தபடி 1,200 கோடி ரூபாயில் 7,500 வீடுகளும் நடப்பாண்டு 1,200 கோடி ரூபாயில் 7,500 வீடுகளும் ஆகமொத்தம் 2,400 கோடி மதிப்பீட்டில் 15,000 அடுக்குமாடி குடியிருப்புகளும் மறுகட்டுமானம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 10,000 குடியிருப்புகளுக்குக் கருணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் 27,538 வீடுகளும் இடிக்கப்பட்டு படிப்படியாக புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டித்தரப்படும். ஏற்கெனவே 200 மற்றும் 300 சதுர அடியிலிருந்த குடியிருப்புகளில் பொதுமக்கள் சிரமப்பட்டு வசித்து வந்தனர். அனைவரும் சிரமமின்றி வாழ வேண்டும் என்பதற்காக தற்போது கட்டப்படும் அனைத்து குடியிருப்புகளும் 400 சதுர அடிக்குக் குறையாமல் கட்டித்தரவேண்டும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் புதிய குடியிருப்புகள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in