
உண்மையான பிரச்சினைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசைதிருப்ப 24x7 இந்து-முஸ்லீம் வெறுப்பு பரப்பப்படுகிறது என்று பாரத் ஜோடோ யாத்திரையில் பேசிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
மத வேறுபாடுகளை ஆயுதமாக பயன்படுத்தி பாஜக அரசு வெறுப்புணர்வை பரப்புவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பாரத் ஜோடோ யாத்திரை இன்று மாலை டெல்லி செங்கோட்டையை அடைந்தபோது உரையாற்றிய ராகுல் காந்தி, "உண்மையான பிரச்சினைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசைதிருப்ப 24x7 இந்து-முஸ்லீம் வெறுப்பு பரப்பப்படுகிறது. நான் நாட்டில் 2,800 கிமீ நடந்தேன், வெறுப்பைக் காணவில்லை. ஆனால், நான் டிவியை இயக்கும்போது வன்முறையைக் காண்கிறேன். ஊடகங்கள் ஒரு நண்பன். ஆனால், திரைக்குப் பின்னால் இருந்து வரும் அழுத்தத்தின் காரணமாக நாம் சொல்வதை அது உண்மையாகக் காட்டுவதில்லை. ஆனால் இந்த நாடு ஒன்றுதான், அனைவரும் ஒற்றுமையாக வாழ விரும்புகிறோம்" என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இன்று காலை யாத்திரையில் இணைந்தனர். பின்னர் செங்கோட்டை அருகே வந்த நடைபயணத்தில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனும் இணைந்தார்.