24*7 மின்சாரம், 2 கோடி வேலைவாய்ப்புகள், குறைந்தபட்ச ஆதரவு விலை... கேஜ்ரிவாலின் 10 தேர்தல் உத்தரவாதங்கள்!

அர்விந்த் கேஜ்ரிவால் 10 உத்தரவாதங்கள்
அர்விந்த் கேஜ்ரிவால் 10 உத்தரவாதங்கள்

24 மணி நேர மின்சாரம், 2 கோடி வேலைவாய்ப்புகள், குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட10 உத்தரவாதங்களை ஆம் ஆத்மி கட்சி மக்களவைத் தேர்தலுக்காக வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் இதனை வெளியிட்டுள்ளார்.

டெல்லியில் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், நாடு முழுவதும் 24 மணி நேர மின்சாரம், இலவச கல்வி மற்றும் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து, இந்திய எல்லையில் சீனா கைப்பற்றிய நிலத்தை மீட்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய கேஜ்ரிவால், “மக்களவைத் தேர்தலுக்காக ஆம் ஆத்மி கட்சியின் 10 உத்தரவாதங்களை இன்று நாங்கள் வெளியிடுகிறோம். எனது கைது காரணமாக இது தாமதமானது. ஆம் ஆத்மி கட்சி ஏற்கெனவே கொடுத்த பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. ஆனால் பாஜக தனது வாக்குறுதிகளில் தோல்வியடைந்துவிட்டது. எனவே இனி கேஜ்ரிவாலின் உத்தரவாதமா அல்லது மோடியின் உத்தரவாதமா என்பதை மக்களே முடிவு செய்யவேண்டும்” என்று கூறினார்

அர்விந்த் கேஜ்ரிவால் 10 உத்தரவாதங்கள்
அர்விந்த் கேஜ்ரிவால் 10 உத்தரவாதங்கள்

மக்களவைத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் 10 உத்தரவாதங்கள்:

1. மின்சாரத்துக்கான உத்தரவாதம்: எங்களது அரசு 24 மணி நேரமும் மின்விநியோகம் இருப்பதை உறுதி செய்யும். மக்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

2. கல்விக்கான உத்தரவாதம்: ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச கல்வியைக் கொடுக்கும் வகையில், தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு அரசுப்பள்ளிகளின் தரத்தை எங்களின் அரசு உயர்த்தும்.

3. சுகாதாரத்துக்கான உத்தரவாதம்: தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் உருவாக்கப்படுகின்றன. ஒவ்வொரு கிராமங்கள் மற்றும் உள்ளூர் பகுதிகளிலும் மொஹல்லா மருத்துவமனைகள் உருவாக்கப்படும்.

4. தேச பாதுகாப்புக்கான உத்தரவாதம்: ஆக்கிரமிக்கப்பட்ட இந்தியாவின் நிலம் சீனாவிடம் இருந்து விடுவிக்கப்படும். ராணுவத்திற்கு சுதந்திரம் அளிக்கப்படும். ராணுவத்துக்கு போதிய நிதியினை வழங்குவோம்.

5.அக்னி வீரர்கள் திட்டம் நீக்கம்: நரேந்திர மோடி அரசால் தொடங்கப்பட்ட அக்னிவீர் திட்டம் கைவிடப்படும். அக்னி வீரர்கள் திட்டத்தினை நிறுத்தி விட்டு, பணியில் சேர்ந்த அனைத்து வீரர்களையும் நிரந்தர வேலையில் முறைப்படுத்துவோம்.

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

6. குறைந்தபட்ட ஆதார விலைக்கான உத்தரவாதம்: விவசாயிகளின் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும். விவசாயிகளின் கண்ணியமான வாழ்வினை மேற்கொள்ள எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கையின் அடிப்படையில் பயிர்களுக்கு உரிய விலை உறுதி செய்யப்படும்.

7. டெல்லி மாநில அந்தஸ்துக்கான உத்தரவாதம்: டெல்லிக்கு முழுமையான மாநில அந்தஸ்தினை எங்களின் அரசு வழங்கும்.

8. வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம்: நாட்டில் வேலைவாய்ப்பின்மையை போக்க எங்கள் அரசு ஆண்டு தோறும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

9. ஊழல் ஒழிப்புக்கான உத்தரவாதம்: ஊழல் ஒழிப்பை உறுதி செய்வோம். பாஜக தனக்கு சாதகமானவர்களைப் பாதுகாக்கும் போக்கினை உடைப்போம்.

10. ஜிஎஸ்டி மீதான உத்தரவாதம்: உற்பத்தி துறையில் சீனாவை மிஞ்சுவதை இலக்காகக் கொண்டு, சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) எளிதாக்கும் திட்டங்கள் உருவாக்கப்படும்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in