
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 2013-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார்.
இவர் மீதும், இவரது மனைவி ரம்யா மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக, புதுக்கோட்டை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் கடந்த 2021-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகம், ஆதரவாளர்களின் வீடுகள் உட்பட 30-க்கு மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், புதுக்கோட்டை நீதிமன்றத்தில் 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று தாக்கல் செய்தனர்.