21 எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைவர் கடிதம் - ஏன் தெரியுமா?

21 எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் தலைவர் கடிதம் - ஏன் தெரியுமா?

ஸ்ரீநகரில் ஜனவரி 30-ம் தேதி நடைபெறும் பாரத் ஜோடோ யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்து 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை காஷ்மீரில் நிறைவடைகிறது. ஸ்ரீநகரில் நடைபெறவுள்ள நிறைவு விழாவில் பங்கேற்க எதிர்க்கட்சிகளுக்கு கார்கே எழுதியுள்ள கடிதத்தில், “இந்த யாத்திரையின் தொடக்கத்திலிருந்தே, ஒத்த எண்ணம் கொண்ட ஒவ்வொரு இந்தியரையும் பங்கேற்க அழைத்துள்ளோம். ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில், பல்வேறு அரசியல் கட்சிகளின் எம்.பிக்களும் பல்வேறு கட்டங்களாக யாத்திரையில் பங்கேற்றனர். ஜனவரி 30-ம் தேதி மதியம் ஸ்ரீநகரில் நடைபெறும் பாரத் ஜோடோ யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்க உங்களை அழைக்கிறேன்.

இந்த நிகழ்வில், வெறுப்பு மற்றும் வன்முறைக்கு எதிராக போராடுவதற்கும், உண்மை, இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் பரப்புவதற்கும், அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் நீதி ஆகிய அரசியலமைப்பு விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்காக நாடு முழுவதும் உள்ள 21 எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பிதழை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று மாலை அக்கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ளார். அழைக்கப்பட்ட கட்சிகளின் பட்டியலில் திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம், சிபிஎம், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அடங்கும். ஆனால், அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in