‘அடுத்த தேர்தலில் நான் ஆட்சிக்கு வரவில்லை என்றால், அதுவே எனது கடைசி தேர்தல்’ - சந்திரபாபு நாயுடு உருக்கம்

‘அடுத்த தேர்தலில் நான் ஆட்சிக்கு வரவில்லை என்றால், அதுவே எனது கடைசி தேர்தல்’ - சந்திரபாபு நாயுடு உருக்கம்

2024-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியை மக்கள் தேர்வு செய்யாவிட்டால், அதுவே தனக்கு கடைசி தேர்தல் என்று ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு கர்னூல் மாவட்டத்தில் நடந்த ஒரு பேரணியில் உணர்ச்சி நிரம்பிய தொனியில் பேசிய முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, “ நான் சட்டமன்றத்திற்கு திரும்ப செல்ல வேண்டும் என்றால், நான் அரசியலில் இருக்க வேண்டும் என்றால், ஆந்திராவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், அடுத்த தேர்தலில் எங்கள் வெற்றியை நீங்கள் உறுதி செய்யவேண்டும். இல்லையெனில் அதுவே எனது கடைசி தேர்தலாக இருக்கும்” என தெரிவித்தார்

மீண்டும் தான் ஆட்சிக்கு வந்த பின்னரே ஆந்திர பிரதேச சட்டசபைக்குள் நுழைவேன் என நவம்பர் 19, 2021 அன்று ஆந்திர சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடு சபதம் செய்தார். தனது சபதத்தை நேற்று மக்களுக்கு நினைவூட்டிய நாயுடு, மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்றால் அடுத்த தேர்தல்தான் தனக்கு கடைசி தேர்தல் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "நான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் மீண்டும் கொண்டு வருவேன். இது ஒவ்வொரு வீட்டிலும் விவாதப் பொருளாக மாற வேண்டும். எனது போராட்டம் குழந்தைகளின் எதிர்காலம், மாநிலத்தின் எதிர்காலம் பற்றியது. இது வெறும் பேச்சு அல்ல. நான் இதை முன்பே செய்துள்ளேன், அதை நிரூபிக்க ஒரு மாதிரி உள்ளது. யோசியுங்கள். நன்மை தீமைகளை எடைபோடுங்கள். நான் சொல்வது சரியென்றால் எனக்கு ஒத்துழைப்பு கொடுங்கள். சிலர் என் வயதைக் கேலி செய்கிறார்கள். நானும் பிரதமர் நரேந்திர மோடியும் ஒரே வயதுடையவர்கள். ஜோ பைடன் 79 வயதில் அமெரிக்க அதிபரானார்” என தெரிவித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அனைத்து இலவச திட்டங்களையும் நீக்கிவிடுவார் என்ற ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்தை மறுத்த அவர்,

"நான் மாநிலத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வேன், வருவாயை அதிகரிப்பேன். அதன் மூலம் நாங்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவோம். உண்மையில், நாங்கள் சிறப்பாகச் செய்வோம், ஆனால் ஜெகன் மோகன் ரெட்டியைப் போல, பெரிய அளவில் கடன் வாங்க மாட்டோம். ஜெகன்மோகன் ஆட்சியில் கண்மூடித்தனமாக கடன் வாங்கி, மாநிலத்தை கடன் வலையில் தள்ளுகிறார். அவர் மாநிலத்தின் சொத்துக்களை அடமானம் வைத்து கடன்களை வாங்குகிறார்” என குற்றம் சாட்டினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in