2024 நாடாளுமன்ற தேர்தல்: பிரதமர் மோடிக்கு தடை போடும் 6 மாநில முதல்வர்கள்

2024 நாடாளுமன்ற தேர்தல்: பிரதமர் மோடிக்கு தடை போடும் 6 மாநில முதல்வர்கள்

பிஹாரில் பாஜக ஆதரவுடன் இருந்த முதல்வர் நிதிஷ்குமார் தன் பதவியை கடந்த வாரம் ராஜினாமா செய்திருந்தார். இதற்கு முன்பாக பாஜகவின் தேசிய ஜனநாயக முன்னணியின் கூட்டணி)யிலிருந்தும்(என்டிஏ விலகி இருந்தார். பிறகு லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) தலைமையிலான மெகா கூட்டணியில் இணைந்து மீண்டும் முதல்வராகி உள்ளார் நிதிஷ்குமார்.

இதன் தாக்கம், பிஹாருடன் சேர்த்து தேசிய அரசியலிலும் அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், பாஜகவிற்கு எதிரானக் கட்சிகளுக்கு தம் எதிர்ப்பை காட்ட ஒரு புத்துணர்வு கிடைத்துள்ளது. இதில், தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பிரதமராக முயலும் நரேந்திரமோடிக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த சவாலில் சில முன்னாள் முதல்வர்களுடன், தற்போதைய ஆறு மாநில முதல் அமைச்சர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

இப்பட்டியலின் முதல்வர்களில், மேற்குவங்க மாநிலத்தின் மம்தா பானர்ஜி, பிஹாரின் நிதிஷ்குமார், தமிழகத்தின் மு.க.ஸ்டாலின், தெலுங்கானாவின் கே.சந்திரசேகரராவ், டெல்லியின் அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்டின் ஹேமந்த் சோரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். முன்னாள் முதல்வர்களில் தேசியவாதக் காங்கிரஸின் தலைவர் சரத்பவார், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே மற்றும் பிஹாரின் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் உள்ளனர்.

பிரதமர் மோடியை எதிர்க்கும் முதல்வர்களில் பிஹாரின் நிதிஷ்குமார் முதலிடம் பெற்றுள்ளார். இங்குள்ள 40 மக்களவை தொகுதிகளில் முதல்வர் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஆர்ஜேடி 19 தொகுதிகளை வைத்துள்ளது. பாஜகவிடம் 17 மக்களவை தொகுதிகள் உள்ளன. பிஹாரில் பாஜக பெற்ற வாக்குகள் 23.58 சதவீதமாகும். ஆறு தொகுதிகளுடன் 7.86 சதவீத வாக்குகளை லோக் ஜன சக்தி(எல்ஜேபி) பெற்றது. 2019-ல் இந்த தேர்தல் நடைபெற்ற போது, முதல்வர் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) பாஜகவின் என்டிஏவுடன் இருந்தது. தற்போது வெளியேறி உள்ள நிலையில் கணக்கிட்டால், மெகா கூட்டணிக்கு 44.87 சதவீத வாக்குகளாக இருக்கும். எனவே, 2024 மக்களவை தேர்தலில் மெகா கூட்டணி வலுவானதாகக் கருதப்படுவதால் அது. பாஜகவிற்கு அதிக தொகுதிகள் பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தும்.

இரண்டாவது பெரிய சிக்கலாக பிரதமர் மோடியை மிரட்டுபவர் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. திரிணமூல் காங்கிரஸின் தலைவரான மம்தா, அங்கு பாஜகவை எதிர்த்து மூன்றாவது முறை முதல்வராகி விட்டார். கடந்த வருடம் இம்மாநிலத்தில் முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மம்தாவிற்கு 48.02 சதவீத வாக்குகள் கிடைத்தன. பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இணைந்து அதிக தீவிரம் காட்டியும் பாஜகவிற்கு 27.81 சதவீதம் கிடைத்தது.

இதற்கும் முன்பாக நடைபெற்ற 2019 மக்களவையில் முதல்வர் மம்தா கட்சிக்கு 43.3, பாஜகவிற்கு 40.7 சதவீத வாக்குகள் கிடைத்தன. 42 தொகுதிகளில் பாஜக 18 சதவீத வாக்குகள் பெற்றிருந்தது. இனி மம்தாவுடன் எதிர்கட்சிகளும் கைகோர்த்தால், பாஜகவின் தொகுதிகள் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

டெல்லியின் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும் பிரதமர் மோடிக்கு பெரும் சவாலாகி விட்டார். டெல்லிக்கு பின் இவரது ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபிலும் ஆட்சியைப் பிடித்துள்ளது. கோவாவுலும் கணிசமான தொகுதிகளைப் பெற்று குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தின் சட்டப்பேரவைகளுக்கும் தீவிரம் காட்டுகிறது. எனினும், டெல்லியில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் பாஜகவே வென்றிருந்தது.

பிரதமர் மோடிக்கான சவாலில் மூன்றாவதாக இருப்பவர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் தலைவரான கே.சந்திரசேகரராவ். முதல்வரான இவர் தொடர்ந்து பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார். 2019 மக்களவை தேர்தலில் சந்திரசேகரராவின் கட்சிக்கு 46.9 சதவீதம், பாஜகவின் கூட்டணிக்கு வெறும் 7.1 சதவீத வாக்குகள் கிடைத்தன. முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் 28.4, அசதுத்தீன் உவைசியின் ஏஐஎம்ஐஎம் 2.7 சதவீத வாக்குகளும் பெற்றன.

எனினும், 2018 சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் ராவின் கட்சிக்கு 41.29, காங்கிரஸ் 29.48, பாஜகவின் என்டிஏவிற்கு 19.45 சதவீத வாக்குகள் கிடைத்தன. இதனால், பாஜக தெலுங்கானாவின் சட்டப்பேரவை தேர்தலிலேயே தீவிரம் காட்ட முடிவு செய்துள்ளது. இதற்காகவே அங்கு கடந்த மாதம் தன் தேசிய செயற்குழுக் கூட்டத்தை பாஜக நடத்தியது. இருப்பினும் தெலுங்கானாவின் 17 மக்களவை தொகுதிகளும் பாஜகவிற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருப்பது ஆளும் திமுக. இங்கு மொத்தம் உள்ள 39 தொகுதிகளில், 2019 மக்களவை தேர்தலில் திமுக 38 பெற்றது. ஒரே ஒரு தொகுதியாக தேனியில் பாஜக கூட்டணியான அதிமுக தட்டிக் கொண்டது. இதனுடன் சேர்த்து அதிமுக, பாஜக கூட்டணிக்கு மாநிலத்தில் கிடைத்த வாக்குகள் சதவீதம் 19.39. இதே மாநிலத்தில் திமுகவிற்கு 33.53 சதவீத வாக்குகள் கிடைத்தன. மக்களவை தேர்தல் பிரச்சாரங்களுக்கு முதல்வரான மு.க.ஸ்டாலின் தலைமை வகித்திருந்தார். இதில் முக்கிய கூட்டணியாக காங்கிரஸுடன் இதர சிறிய கட்சிகளும் இடம் பெற்றிருந்தன.

இதற்கு முன்பான 2014 மக்களவை தேர்தலில் திமுகவிற்கு ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை. இனி வரவிருக்கும் 2024 மக்களவை தேர்தலின் போதும் தமிழகத்தில் திமுக ஆட்சி இருக்கும். எனவே, இது பாஜகவிற்கு தமிழகத்தின் மக்களவை தொகுதிகளில் வெற்றி பெறுவது பெரும் சவாலாகி வருகிறது. இம்மாநிலிருந்து பாஜகவிற்கு அல்லது அதன் கூட்டணிகளுக்கு தொகுதிகள் கிடைக்காவிட்டால் அது மீண்டும் பிரதமராக மோடிக்கு தடையாக இருக்கும்.

இந்த முதல்வர்கள் எதிர்ப்பு பட்டியலில் ஜார்க்கண்டின் முதல்வர் ஹேமந்த் சோரனும் இடம் பெற்றுள்ளார். இவரது கட்சியையும் மகராஷ்டிராவை போல் பாஜக பிளக்க முயல்கிறது. இதற்கு சாதகமாக ஜார்க்கண்டில் அதிகம் வாழும் பழங்குடியினர் சமூகத்திலிருந்து குடியரசு தலைவர் திரவுபதி முர்முவும் தேர்வு செய்துள்ளது பாஜக. எனினும், முதல்வர் சோரன் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்டோரால் அவர் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் பிந்தியிருக்கவில்லை.

முன்னாள் முதல்வர்களில் சரத்பவாரின் தேசியவாதக் காங்கிரஸும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவும் மகாராஷ்டிராவில் தம் ஆட்சியை இழந்துள்ளனர். இதனால், இவர்கள் இருவரும் 2024 மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவின் 48 மக்களவை தொகுதிகளில் 2019-ல் பாஜக 23, அதனுடன் கூட்டணி வைத்த சிவசேனா 18 பெற்றன. சதவீதத்தில் பாஜக 27.84, சிவசேனா 23.5, காங்கிரஸ் 16, தேசியவாதக் காங்கிரஸ் 15.66 வாக்குகள் பெற்றிருந்தன. எனவே, 2024-ல் சிவசேனா இன்றி பாஜகவின் வாக்குகள் பிரிந்து தொகுதிகளும் குறையும். இதுவும் மீண்டும் பிரதமராக முயலும் மோடிக்குத் தடையாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in