தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த 20 ஆயிரம் போலீஸாரை போதை தடுப்புப் பிரிவில் பணியமர்த்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மயிலாடுதுறையில் நேற்று மாலை நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: "தமிழகத்தில் தொடங்கப்படும் புதிய தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்குவதற்கான தனிச் சட்டத்தை தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வரும் நீர் மேலாண்மை திட்டத்தை அதிமுக ஆட்சியில் ஓரளவுக்கு செயல்படுத்தினர். ஆனால் திமுகவினர் அதனை கண்டு கொள்ளவில்லை. நீர் மேலாண்மைக்கு 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அத்தொகையை ஆண்டிற்கு 20 ஆயிரம் கோடி செலவு செய்தால்தான் அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.
டெல்டா மாவட்டங்களில் கஞ்சா, குட்கா போதைப்பொருள்கள் புழக்கம் அதிகரித்துள்ளதைத் தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை தடுப்புப்பிரிவில் போதுமான காவலர்கள் இல்லாததால் இந்த குற்றங்கள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. எனவே, போதை தடுப்பு பிரிவுக்கு 20,000 போலீஸாரை பணியமர்த்தி தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இல்லையெனில், இளைய சமுதாயம் சீரழிந்து விடும்.
இன்றைய சூழலில் பாமக எந்த கூட்டணியிலும் இல்லை. 2026-ல் பாமக தலைமையிலான கூட்டணி அமைப்பதற்கான வியூகங்களை 2024 மக்களவைத் தேர்தலில் வகுக்க உள்ளோம். மக்களவைத் தேர்தல் குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். காவிரி உபரிநீர் நேரடியாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் 10 இடங்களில் தடுப்பணை கட்டினால் 50 டிஎம்சி தண்ணீர் வரை சேமிக்க முடியும். இதனை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து சமுதாயத்தினருக்கும் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதுவே சமூக நீதி. மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டாலும் இருதயம், நரம்பியல் உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் இல்லாமல் உள்ளது. எனவே, மயிலாடுதுறையில் மருத்துவ கல்லூரி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். அவருடன் பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.