
தமிழகத்தில் உள்ள 2 ஆயிரம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் நஷ்டத்தில் இயங்குகின்றன என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
சிவகங்கையில் வீரமங்கை வேலுநாச்சியாரின் 293-வது பிறந்த தினம் விழாவில் கலந்துகொண்டபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், “பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் 17 மாவட்டங்களில் விளைவிக்கப்பட்ட 12 கோடி கரும்புகளில், 2.19 கோடி கரும்புகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, பொங்கல் பொருட்கள் தொகுப்புடன் வழங்கப்படவுள்ளது. பச்சரிசி மத்திய தொகுப்பில் இருந்து வாங்கப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள 4,500 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் 2 ஆயிரம் வங்கிகள் சற்று நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இந்த வங்கிகள் எதிர்காலத்தில் லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுதிறனாளிகள், முதியோர் உள்ளிட்டோர் பொங்கல் தொகுப்பை பெறுவதில் எந்த குழப்பமும் கிடையாது. கரோனா பேரிடர் காலத்தில் வழங்கிய நிவாரண தொகையை தான் ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என அன்றைய அரசிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து திமுக அரசு பொறுப்பேற்றதும் எஞ்சிய ரூ.4 ஆயிரத்தை அனைத்து தரப்பு மக்களுக்கும் முதல்வர் வழங்கினார்” என்று தெரிவித்தார்