கறவை மாட்டுக் கடனுக்கான வட்டி 9 சதவீதமாக குறைப்பு... அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு!

கறவை மாட்டுக் கடனுக்கான வட்டி 9 சதவீதமாக குறைப்பு... அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு!
Updated on
1 min read

பால் உற்பத்தியை பெருக்குவதற்காக மானிய கடன், வங்கிக் கடன் அதிக அளவில் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் நடப்பாண்டில் 2 லட்சம் பேருக்கு கறவை மாடு வாங்க கடன் வழங்கப்படும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ‘’பால் உற்பத்தியை பெருக்குவதற்காக மானிய கடன், வங்கிக் கடன் அதிக அளவில் ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கடனுக்கான வட்டி விகிதம் 15 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் கால்நடை வாங்குவதற்காகவும் அதை பராமரிப்பதற்காகவும் ஏறத்தாழ ரூ.200 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கடன் உதவி கோரி 1.10 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதை பரிசீலனை செய்து விரைவில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பச்சை நிற பால் பாக்கெட் நிறுத்தப்படவில்லை. மற்றொரு தயாரிப்பை அறிமுகம் செய்து அது பசும்பால் தரத்துக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அது குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

படித்து வேலையில்லாத இளைஞர்கள், பெண்கள், விளிம்பு நிலை மக்கள் யாராக இருந்தாலும் புதிதாக ஆவின் விற்பனை மையங்களை தொடங்க வேண்டுமானால் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம். இவர்களுக்கு கடன் உதவி செய்யத் தயாராக இருக்கிறோம்.

மழையால் பால் விற்பனை பாதிக்காது என்பதால் 100% தட்டுப்பாடு இல்லாமல் பால் விற்கப்படும். சென்னையில் 70 ஆயிரம் லிட்டர் பால் கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி கொள்முதல் விற்பனையை பெருக்கும் முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்

நடப்பாண்டில் 2 லட்சம் பேருக்கு கறவை மாடுகளை வாங்க மானியத்துடன் கடன் வழங்கும் திட்டத்தையும் தொடங்கியுள்ளோம்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in