அடுத்த அதிர்ச்சி... வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அண்ணா பல்கலையில் 2 கேமராக்கள் பழுது!

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

தென் சென்னை மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மையமான அண்ணா பல்கலைகழகத்தில் பொருத்தப்பட்டிருந்த 2 சிசிடிவி கேமராக்கள் பழுதானதையடுத்து, அவை உடனடியாக மாற்றப்பட்டன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை வருகிற ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தொடர் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிசிடிவி கேமராக்கள்
சிசிடிவி கேமராக்கள்

இதனிடையே கடந்த சில நாட்களாக வாக்கு எண்ணும் மையங்களில் அடுத்தடுத்து சிசிடிவி கேமராக்கள் பழுதாவது தொடர்ந்து வருகிறது. நீலகிரி, ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வாக்கு எண்ணும் மையங்களில் திடீரென சிசிடிவி கேமராக்கள் பழுதானதால், வேட்பாளர்களின் முகவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இந்த பழுது நீக்கப்பட்ட போதும், உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

நீலகிரியில் அதிகப்படியான வெயில், ஈரோட்டில் தொழில்நுட்ப கோளாறு, விழுப்புரத்தில் மழை ஆகியவற்றால் சிசிடிவிக்கள் பழுதானதாக தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

தென்சென்னை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி மையம் (கோப்பு படம்)
தென்சென்னை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவி மையம் (கோப்பு படம்)

தென் சென்னை மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் தற்போது அண்ணா பல்கலைகழக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு 210 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக அண்ணா பல்கலைகழகத்தில் பொருத்தப்பட்டிருந்த 2 சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்தன. இதையடுத்து அவை உடனடியாக மாற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சிசிடிவி கேமராக்கள் பழுதாகி வருவது, அரசியல் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in