குலாம் நபி ஆசாத்தின் கட்சியிலிருந்து மீண்டும் காங்கிரஸில் இணைந்த 17 மூத்த தலைவர்கள்: ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு

குலாம் நபி ஆசாத்தின் கட்சியிலிருந்து மீண்டும் காங்கிரஸில் இணைந்த 17 மூத்த தலைவர்கள்: ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு

குலாம் நபி ஆசாத்தின் ஜனநாயக ஆசாத் கட்சியில் (டிஏபி) சேர்ந்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் மற்றும் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பீர்சாதா முகமது சயீத் உட்பட பதினேழு மூத்த தலைவர்கள் இன்று மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்பினர்.

ஜம்மு-காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரை நுழையவுள்ள நிலையில், 17 முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சிக்கு திரும்பியுள்ளனர். முன்னதாக, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தொடங்கிய தனிக்கட்சியில் இவர்கள் இணைந்திருந்தனர்.

கட்சிக்குத் திரும்பிய தலைவர்களை வரவேற்றுப் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், "பாரத் ஜோடோ யாத்திரை நாட்டில் ஒரு பெரிய இயக்கமாக மாறியுள்ளது. அதனால்தான் இந்த தலைவர்கள் அனைவரும் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வர முடிவு செய்துள்ளனர். இது ஒரு ஆரம்பம் மட்டுமே, யாத்திரை ஜம்மு-காஷ்மீரில் நுழையும் போது, காங்கிரஸ் சித்தாந்தம் மற்றும் ஒன்றுபட்ட இந்தியாவை விரும்பும் அனைவரும் கட்சியில் சேருவார்கள். கட்சியிலிருந்து சென்றவர்கள் இரண்டு மாதங்கள் விடுமுறையில் சென்றிருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சிக்கு திரும்புவதற்கு டிஏபி தலைவர் குலாம் நபி ஆசாத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு, “அப்படிப்பட்ட பேச்சுக்கள் எதுவும் இல்லை” என்று வேணுகோபால் மறுத்துள்ளார். யாத்திரைக்கு ஆசாத் அழைக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து பேசிய அவர், “காங்கிரஸ் சித்தாந்தத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பாரத் ஜோடோ யாத்திரையில் சேர வரவேற்கிறோம். ஒத்த எண்ணம் கொண்ட அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா சயீத் ஆகியோர் யாத்திரையில் கலந்து கொண்டு ஸ்ரீநகரில் ராகுல் காந்தியுடன் நடைபயணம் மேற்கொள்வார்கள்” என்றும் அவர் கூறினார்.

இது தொடர்பாகப் பேசிய அக்கட்சியின் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "இன்று மொத்தம் 19 தலைவர்கள் இணையவிருந்தனர், ஆனால் 17 பேரால் மட்டுமே இன்று டெல்லிக்கு வந்து சேர முடிந்தது. இது முதல் கட்டம், மற்றவர்களும் விரைவில் இணைவார்கள்" என்றார்.

காங்கிரஸில் இருந்து விலகியதற்கான காரணங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த தாரா சந்த், "உணர்ச்சிவசப்பட்டு நட்பின் காரணமாக நாங்கள் அவசரப்பட்டு கட்சியை விட்டு வெளியேறினோம்” என்று கூறினார். பீர்சாதா, “ஜம்மு காஷ்மீரில் கடந்த 8 ஆண்டுகளில் பயங்கரவாதம் குறைவதற்குப் பதிலாக அதிகரித்துள்ளது. இதனால் அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் வலுப்படுத்தி ஒன்றிணைக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்றார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in