தமிழகம் முழுவதும் பொங்கலுக்கு 16,932 சிறப்புப் பேருந்துகள்

தமிழகம் முழுவதும் பொங்கலுக்கு 16,932 சிறப்புப் பேருந்துகள்

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 16 ஆயிரத்து 932 அரசுப் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது.

பொங்கல் பண்டிகை ஜன.15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதிலும் சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் போக்குவரத்து, காவல், நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதன் பின் அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிவிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.12-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சென்னையில் இருந்து தினமும் இயங்கும் 2,100 வழக்கமான பேருந்துகளுடன், 3 நாட்களும் சேர்த்து 4,449 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 6,183 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில், தமிழகம் முழுவதும் மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்படும்.

இதேபோல, பொங்கல் பண்டிகை முடிந்து ஊர் திரும்புவோர் வசதிக்காக, வெளியூர்களில் இருந்து சென்னைக்கு ஜன.16 முதல் 18-ம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் 4,334 சிறப்பு பேருந்துகள், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 4,985 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 15,619 பேருந்துகள் இயக்கப்படும். சென்னை கோயம்பேட்டில் இருந்து ஜெயங்கொண்டம், அரியலூர், பூந்தமல்லியில் இருந்து ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலத்தில் இருந்து பெங்களூரு போன்ற இடங்களுக்கு முன்பதிவு செய்து பயணிக்க தற்போது முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும். அரசு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யும் வகையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்கள், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லியில் தலா ஒன்று என மொத்தம் 12 முன்பதிவு மையங்கள் ஜன.12 முதல் 14-ம் தேதி வரை செயல்படும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் TNSTC செயலி அல்லது www.tnstc.in என்ற இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். பேருந்துகள் இயக்கம் குறித்து அறிந்துகொள்ள 94450 14450 மற்றும் 94450 14436 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், 1800 425 6151, 044-24749002, 26280445, 26281611 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in