உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

என்கவுண்டரில் கொல்லப்பட்ட 166 குற்றவாளிகள்: யோகி ஆதித்யநாத் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

கடந்த 5 ஆண்டுகளில் உத்தரப் பிரதேச காவல்துறையினருடன் நடந்த என்கவுண்டர்களில் 166 குற்றவாளிகள் கொல்லப்பட்டதாகவும், 4,453 பேர் காயமடைந்ததாகவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ரிசர்வ் போலீஸ் லைன்ஸில் நேற்று நடந்த காவலர் நினைவு தின அணிவகுப்பில் உரையாற்றிய முதல்வர் யோகி ஆதித்யநாத், “2017 மற்றும் 2022 க்கு இடையில் காவல்துறையினருடன் நடந்த என்கவுண்டர்களில் 166 குற்றவாளிகள் கொல்லப்பட்டனர், 4,453 பேர் காயமடைந்தனர். பதின்மூன்று காவலர்களும் இந்த என்கவுண்டர் சம்பவங்களின்போது கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இங்குள்ள தியாகிகளான காவலர்களின் குடும்பங்களுக்கு, அவர்களின் நலன் மற்றும் அவர்களின் அனைத்து தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எப்போதும் எடுத்து வருகிறது. அதைத் தொடர்ந்து செய்யும்” என்று கூறினார்.

மேலும், "உத்தர பிரதேச அரசு, காவலர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர சைக்கிள் கொடுப்பனவை ரூ 200லிருந்து, ரூ500 ஆக மாதாந்திர மோட்டார் சைக்கிள் கொடுப்பனவாக உயர்த்த முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்தார்

ஒரு செய்திக்குறிப்பில், காவல்துறை மற்றும் மாகாண ஆயுதப்படை காவலர்களின் தலைமை கான்ஸ்டபிள்கள் மற்றும் கான்ஸ்டபிள்களுக்கு தொலைபேசி உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ. 2,000 கூடுதலாக வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும், அரசாங்கம் காவல்துறையினரை இ-பென்ஷன் போர்ட்டலுடன் இணைக்கும் என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார்.

முன்னதாக, அரசு மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ரூ 5 லட்சம் வரையிலான மருத்துவக் கட்டணங்களை காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) இப்போது இறுதி செய்யலாம் என்றும் முதல்வர் கூறினார்.

பணியின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய யோகி ஆதித்யநாத், நாட்டின் பாதுகாப்பைப் பேணுவதில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தருணம் இது என்று கூறினார்.

2017 ம் ஆண்டில் மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசாங்கம் பொறுப்பேற்றதில் இருந்து உத்தரபிரதேச காவல்துறையில் 22,000 பெண்கள் உட்பட 150,231 பேர் பணியமர்த்தப்பட்டதாக யோகி ஆதித்யநாத் கூறினார். மேலும், 45,689 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை நடந்து வருகிறது எனவும் அவர் தெரிவித்தார். 2017-18 ம் ஆண்டில் காவல்துறையின் பட்ஜெட் சுமார் ரூ. 16,115 கோடியாக இருந்தது என்றும், இது 2021-22 ம் ஆண்டில் சுமார் ரூ. 30,203 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் முதலமைச்சர் கூறினார். மேலும், 244 புதிய காவல் நிலையங்களும், 133 புதிய புறக்காவல் நிலையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in