
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்பமனு வழங்கலாம் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா அண்மையில் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு அந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதனிடையே, எடப்பாடி பழனிசாமி அணி இந்தத் தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருக்கிறது. அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் இந்த தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு இருக்கிறார். இரு அணியினரும் பாஜகவினரை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர். ஆனால் பாஜக தரப்பில் இருந்து எந்த விதமான அறிவிப்பும் வெளியிடவில்லை.
அதே நேரத்தில் தேனியில் இன்று தொண்டர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நம்முடைய வழி தனி வழி என்று கூறி இருப்பது பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்திருக்கிறார். போட்டியிட விரும்புவோர் இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என்றும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டண தொகையாக 15,000 செலுத்தி விருப்ப மனு அளிக்கலாம் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறி இருக்கிறார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட அதிமுகவினருக்கு விருப்ப மனு விநியோகம் தொடங்கியிருக்கிறது.