ராமநாதபுரத்தில் நாளை முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு

 ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்
ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், ''ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11-ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் அக்டோபர் 30-ம் தேதி கமுதி பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்ச்சிகளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்கும் பொருட்டு செப்டம்பர் 9-ம் தேதி முதல் இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த உத்தரவால் மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள் நடத்தவும், பொது இடங்களில் 5 பேர் மற்றும் அதற்கு மேற்பட்டோர் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் செப்.9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையும், அக்டோபர் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையும் வெளிமாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்களில் தலைவர்களின் நினைவு, பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கு அஞ்சலி செலுத்த வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் அஞ்சலி செலுத்தும் இடத்திலிருந்து 1 கி.மீட்டர் தொலைவில் ஜோதி ஓட்டங்கள் எடுத்துவரவும் அனுமதியில்லை.

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் சுமார் 7,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்ட எல்லையான மருச்சுக்கட்டி முதல் பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 145 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டும், பரமக்குடியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டும் கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

இமானுவேல் சேகரன் நினைவிடம் அருகே புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்த ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர் வாடகை வாகனங்களில் வரவும், திறந்த வாகனங்கள், இருசக்கர வானகங்களில் வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சொந்த வாகனங்களில் வருவோர் அந்தந்த டிஎஸ்பி அலுவலகங்களின் வாகன அனுமதிச்சீட்டு பெற்று வர வேண்டும்.

அஞ்சலி செலுத்த வருவோரின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் 200 பேருந்து வசதி செய்து தரப்படும். ஒவ்வொரு பேருந்திலும் அஞ்சலி செலுத்த வருவோருடன் ஒரு போலீஸும் உடன் வருவார். இதுவரை மாவட்டத்தில் 795 பேர் சொந்த வாகனங்களில் வரவும், அரசியல் கட்சி தலைவர்கள் 10 பேர் அஞ்சலி செலுத்த நேர ஒதுக்கீடு கேட்டும் விண்ணப்பித்துள்ளனர்'' என ஆட்சியர் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in