
விடுதலை போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களின் குருபூஜை விழா வருகிற 27-ம் தேதி கடைபிடிக்கப்பட உள்ளது. அதனை முன்னிட்டு இன்று முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.
ஆண்டுதோறும் அக்டோபர் 27-ம் தேதி மருது பாண்டியர் குருபூஜை விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவிற்கு தமிழக அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் மணி மண்டபத்திற்கு வந்து மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
இந்த நிலையில், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அக்.27ம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதேபோல அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தி அனுசரிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், அசம்பாவிதங்கள் நடைபெறா வண்ணம் தடுக்கும் வகையிலும் இன்று முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.