12 எம்எல்ஏக்களுடன் குஜராத்தில் தங்கியுள்ள மூத்த அமைச்சர்: சிவசேனா அரசுக்கு ஆபத்து?

12 எம்எல்ஏக்களுடன் குஜராத்தில் தங்கியுள்ள மூத்த அமைச்சர்: சிவசேனா அரசுக்கு ஆபத்து?

மகாராஷ்டிர மாநில அமைச்சரும், சிவசேனா கட்சியின் மூத்த தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, அக்கட்சியின் 12 எம்எல்ஏக்களுடன் குஜராத் சூரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. சிவசேனா தலைமையின் மீது வருத்தத்தில் இருக்கும் ஷிண்டேவை யாரும் தொடர்பு கொள்ள முடியாத நிலை எழுந்துள்ளதால், மகாராஷ்ட்டிர அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏக்நாத் ஷிண்டே ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையின் மீது வருத்தத்தில் உள்ளனர். எனவே இது சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆளும் கூட்டணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. ஏக்நாத் ஷிண்டே இன்று மதியம் செய்தியாளர்களிடம் பேசக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏக்நாத் ஷிண்டே தானேவில் ஒரு முக்கிய சிவசேனா தலைவராக உள்ளார், அவர் அந்த பிராந்தியத்தில் கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். மக்கள் ஆதரவுமிக்க தலைவராகப் பார்க்கப்படும் ஷிண்டே, 2014-ம் ஆண்டு சிவசேனா சார்பில் மகாராஷ்டிர சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். தற்போது மகா விகாஸ் அகாடி அரசாங்கத்தில் நகர்ப்புற மேம்பாடு மற்றும் பொதுப்பணித்துறையின் கேபினட் அமைச்சராக உள்ளார்.

சமீப காலமாக ஏக்நாத் ஷிண்டே தலைமையின் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், தன்னை கட்சியின் தலைமை ஓரங்கட்டுவதாக வருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவரது மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே, கல்யாண் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

ஏக்நாத் ஷிண்டேவின் இந்த நடவடிக்கை காரணமாக உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்ட்டிர அரசாங்கத்தின் எதிர்காலம் பற்றிய கேள்வி எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in