
தெலங்கானா தேர்தல் வாக்குப்பதிவு தேதி நெருங்கி வரும் நிலையில், இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தற்போதைய சூழலில், சந்திர சேகர் ராவ் போட்டியிடும் 2 தொகுதிகளிலும் அவரை எதிர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் தென் மாநிலமான தெலுங்கானாவில் வரும் நவம்பர் 30ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 3ம் தேதி தெலங்கானாவில் வேட்புமனுத்தாக்கல் தொடங்கி 9ம் தேதி முடிவடைந்தது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 13ம் தேதி நடைபெற்றது. வேட்பு மனுக்களை திரும்பப் பெருவதற்கான கடைசி நாள் இன்று. தேர்தல் நவம்பர் 30ம் தேதி நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெறுகிறது.
தெலங்கானாவில் சந்திர சேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. ஆளும் பிஆர்எஸ் 3வது முறையாக மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக போராடி வருகிறது. அதேசமயம், காங்கிரஸ் கட்சி பயங்கர டஃப் கொடுத்து வருகிறது. பாஜகவும் தெலங்கானாவில் காலூன்ற கடுமையாக முயன்று வருகிறது. குறிப்பாக பாஜகவுக்காக பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து தேர்தல் பரப்புரை செய்தார். அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலர் தெலங்கானாவில் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
பிஆர்எஸ், தெலுங்கானாவின் 119 இடங்களிலும் போட்டியிடுகிறது, அதே நேரத்தில் காங்கிரஸ் அதன் கூட்டணிக் கட்சியான சிபிஐக்கு ஒரு இடத்தை ஒதுக்கியுள்ளது. பாஜக 111 இடங்களில் போட்டியிடுகிறது, மீதமுள்ள 8 தொகுதிகளில் அதன் கூட்டணிக் கட்சியான ஜனசேனா கட்சி போட்டியிடுகிறது. அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஒன்பது இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மற்ற இடங்களில் கேசிஆரின் பி.ஆர்.எஸ் கட்சிக்கு ஆதரவை அறிவித்துள்ளது.
தெலங்கானாவைப் பொறுத்தவரை அங்கே மொத்தமுள்ள 119 தொகுதிகளில், பெரும்பான்மை பெற எந்தவொரு கட்சியும் குறைந்தது 60 இடங்களில் வெல்ல வேண்டும். கருத்துக்கணிப்புகளைப் பொறுத்தவரை பெரும்பாலும், பிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதேசமயம், காங்கிரஸ் கட்சி 50க்கும் அதிகமான இடங்களில் வெல்லும் என்றும் கணிக்கப்படுகிறது.
தெலங்கானா முதல்வரும், பி.ஆர்.எஸ் தலைவருமான கே.சந்திரசேகர ராவ், இந்த தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். சித்திப்பேட்டை மாவட்டம் கஜ்வேல் தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்தார் கேசிஆர். அதேபோல, காமாரெட்டி மாவட்டம் காமாரெட்டி தொகுதியிலும் கேசிஆர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். சந்திரசேகர ராவ் முதல்முறையாக 2 தொகுதிகளில் இந்த முறை போட்டியிடுகிறார்.
கஜ்வேல் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு கே.சந்திரசேகர் ராவ் 2 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தொகுதியில், கடந்த 2014 ஆம் ஆண்டு போட்டியிட்டபோது 19,391 வாக்குகள் வித்தியாசத்திலும் 2018 ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் 58,290 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார் கேசிஆர். இந்த முறை, முன்னாள் பிஆர்எஸ் நிர்வாகியும், ஹுசூராபாத் எம்எல்ஏவுமான பாஜகவின் எடெலா ராஜேந்தர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தூம்குண்டா நர்சா ரெட்டி ஆகியோரை கேசிஆர் எதிர்கொள்கிறார் .
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவுற்று வேட்பாளர்கள் பட்டியலை தெலங்கானா மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 119 தொகுதிகளுக்கு மொத்தம் 4,798 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் வேட்பு மனு பரிசீலனை செய்ததில் 2,898 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்றே கடைசி நாள் என்பதால், இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் போட்டியிடும் கஜ்வேல் தொகுதியில் அவரை எதிர்த்து மொத்தம் 113 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதேபோன்று கேசிஆர் போட்டியிடும் மற்றொரு தொகுதியான காமாரெட்டி தொகுதியில் அவரை எதிர்த்து 57 பேர் போட்டியிடுகின்றனர். இதில் பலர் காமரெட்டி விவசாயிகள் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜேஏசி) உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காமாரெட்டி நகராட்சியின் மாஸ்டர் பிளான் திட்டத்தால் நிலத்தை இழக்கும் விவசாயிகள் கேசிஆருக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். மேலும், காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா மாநில தலைவர் ரேவந்த் ரெட்டியும் கேசிஆரை எதிர்த்து காமாரெட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று மாலை வெளியாகும் இறுதி வேட்பாளர் பட்டியலில் மொத்தம் எத்தனை வேட்பாளர்கள் என்ற முழு விவரம் தெரியவரும்.
இதையும் வாசிக்கலாமே...
உஷார்; 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
மீண்டும் விலை உயரும் அபாயம்: தொடர்மழையால் செடியிலேயே அழுகும் தக்காளி!
மீண்டும் மீண்டுமா... அடுத்த சிக்கலில் மாட்டித் தவிக்கும் சிவகார்த்திகேயன்!
பிரதமர் மோடி குறித்து அவதூறு: ஆம் ஆத்மிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
கிராமத்தில் 20 முறைக்கும் மேல் மின்தடை: அதிகாரிகளைப் பழிவாங்க கவுன்சிலர் செய்த அதிர்ச்சி காரியம்!