தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நவம்பர் 1-ம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு உள்ளது. இவரது இல்லத்துக்கு அருகில், சுமார் 50 அடி உயரமுள்ள பாஜக கொடி கம்பத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாஜகவினர் அந்த 50 அடி உயரத்திலுள்ள பாஜக கொடிக்கம்பத்தை, அண்ணாமலையின் வீட்டு அருகே நட்டு வைத்திருந்தனர். ஆனால், நெடுஞ்சாலைத்துறையில் அனுமதி வாங்காமல் இந்த கொடிக்கம்பத்தை நட்டு வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பகுதியிலுள்ள இஸ்லாமிய அமைப்புகளும், பொதுமக்களில் சிலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி வாங்காமல் கொடிக்கம்பத்தை வைத்துள்ளதால், அதை அகற்ற வேண்டும் என்று இஸ்லாமியர்கள் வலியுறுத்தினர். இதற்குப் பிறகு, கொடிக்கம்பத்தை அகற்றுவதற்காக போலீஸார் ஜேசிபி வாகனத்தை வரவழைத்தனர். அதைக் கண்டு ஆவேசமான பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதனால், போலீஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்படும் சூழல் உருவானது.. இந்த கைகலப்பில் ஒருவரின் மண்டை உடைந்தது. இதில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்து அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘’குண்டு வைத்து மக்கள் பலரைக் கொன்ற தீவிரவாதிகளை எல்லாம், அரசியலுக்காக விடுதலை செய்யத் துடிக்கும் திமுக, தீவிரவாதிகள் காரில் வெடிகுண்டுகளோடு சுதந்திரமாகச் சுற்றித் திரியும் அளவுக்கு உளவுத்துறையில் கோட்டை விட்ட திமுக, பனையூரில் கிளை தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்ற, தீவிரவாதிகளைக் கைது செய்யப் போவது போல நள்ளிரவில் பெரும் போலீஸ் படையுடன் புறப்பட்டு வந்தது பெரும் வினோதம்.
திமுக அரசின் உத்தரவின் பேரில், நள்ளிரவில் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த காவல்துறையினரை எதிர்த்துப் போராடிய தமிழக பாஜக சகோதர, சகோதரிகள் மீது, காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பொதுமக்களை ஏய்த்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் திமுக, எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுக, தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நவம்பர் 1-ம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் நடப்படும்.
பத்தாயிரமாவது கொடி கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி 8-ம் தேதி (100வது நாள்) நேற்று காவல்துறையினரின் தடியடியில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சகோதரர் பாஸ்கரன் முன்னிலையில் கொடி கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும் என்பதையும், ஊழல் திமுக அரசுக்கு மிக பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என குறிப்பிட்டுள்ளார்.