அதிக உறுப்பினர்களைச் சேர்த்தால் 10 ஆயிரம் ரூபாய் பரிசு!

குமரியில் காங்கிரஸ் புது ‘ஆஃபர்’!
அதிக உறுப்பினர்களைச் சேர்த்தால் 10 ஆயிரம் ரூபாய் பரிசு!
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

தமிழகத்திலேயே காங்கிரஸ் கட்சி மிக வலுவாக இருக்கும் மாவட்டம் கன்னியாகுமரி. இங்கு மொத்தமுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சரிபாதி காங்கிரஸ் கட்சியின் வசம் உள்ளது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே வாகைசூடியது.

ஏற்கெனவே குமரியில் பலம்வாய்ந்த அமைப்பாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை இன்னும் பலப்படுத்தும் வகையில் புதிய திட்டம் ஒன்றை அறிவித்திருக்கிறது குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியுடன்  குமரி காங்கிரஸ் நிர்வாகிகள்
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியுடன் குமரி காங்கிரஸ் நிர்வாகிகள்

அதன்படி, இப்போது இணையவழியில் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸில் சேர விரும்புவோர் இதற்கென உருவாக்கப்பட்டிருக்கும் செயலியைத் தங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து, மாவட்ட தலைவர்கள், எம்எல்ஏ-க்கள், எம்.பி-க்களின் வழிகாட்டுதலோடு இணையவழியில் சேர முடியும். இதில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பினுலால் சிங் ஆஃபர்களையும் அள்ளித் தூவியுள்ளார்.

“மேற்கு மாவட்டத்தில் அதிக உறுப்பினர்களைச் சேர்க்கும் பஞ்சாயத்து கமிட்டி தலைவர்களில் முதல் மூவருக்கு 10,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் அல்லது 10,000 ரூபாய் ரொக்கப் பணம் என அவர்கள் விரும்புவது வழங்கப்படும். இவர்கள் குறைந்தது 2,000 உறுப்பினர்களைச் சேர்த்திருக்க வேண்டும். இந்தப் பரிசினைப் பெறும் பஞ்சாயத்து கமிட்டிகளில் இருவர் ஒரே வட்டாரத்தில் இருந்தால் அவை தலா 5,000 ரூபாயாகப் பிரித்துக் கொடுக்கப்படும். இதேபோல் அதிக உறுப்பினரைச் சேர்க்கும் தொண்டர்கள், நிர்வாகிகளில் முதல் நபருக்கு 3,000 ரூபாய், இரண்டாம் நபருக்கு 2,000 ரூபாய், மூன்றாம் நபருக்கு 1,000 ரூபாய் பரிசாக வழங்கப்படும்” என பினுலால் சிங் அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியை தேசிய அளவில் வலுப்படுத்த ஜி-23 தலைவர்கள் உள்ளிட்ட பலருடன், கட்சித் தலைவர் சோனியா காந்தி பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் கலந்துகொள்ளும் கூட்டம், வரும் சனிக்கிழமை (மார்ச் 26) நடக்கவிருக்கிறது. கே.சி.வேணுகோபால் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் உட்கட்சித் தேர்தல் நடத்துவது, புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கான முன்னெடுப்புகள், பாஜக அரசின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களைத் திட்டமிடுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படவிருக்கின்றன.

இந்தச் சூழலில், கட்சிக்குப் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணிகளைக் குமரி காங்கிரஸ் புதுவேகத்துடன் முன்னெடுத்திருக்கிறது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in