10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நவ.12ல் அனைத்துக்கட்சி கூட்டம்

10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நவ.12ல் அனைத்துக்கட்சி கூட்டம்

பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்காக 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க நவ.12-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

பொருளாதாரம் ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என மூன்று நீதிபதிகள் ஆதரவாகவும், 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என தலைமை நீதிபதி உள்ளிட்ட இருவர் தீர்ப்பு வழங்கினர்.

இந்த தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப்போராட்டத்தில் ஒரு பின்னடைவு என்றும், தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதே போல இந்த தீர்ப்புக்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், நவ. 12-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து கட்சிகளின் சட்டப்பேரவைக்குழு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இன்று காலை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, எம்.பி.யும் வழக்கறிஞருமான நெல்சன் உள்ளிட்டோருடன் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in