1895 பேராசிரியர் பணி நியமனங்களில் 10 சதவீத ஒதுக்கீடு பின்பற்றப்பட மாட்டாது: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

1895 பேராசிரியர் பணி நியமனங்களில் 10 சதவீத ஒதுக்கீடு பின்பற்றப்பட மாட்டாது: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

1895 காலியிடங்களுக்கான கௌரவ விரிவுரையாளர்கள் நேர்முகத் தேர்வு மூலம் உடனடியாக நியமிக்கப்பட உள்ளனர். இந்த நியமனங்களில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்காக 10 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றபட மாட்டாது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் மாநிலம் முழுவதும் உள்ள இணை இயக்குநர்களின் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பின் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் கூறுகையில், " உயர் கல்வி துறையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

மாணவர் சேர்க்கை ஆசிரியர் பணியிடங்கள் ஆகியவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் பொறியியல் மாணவர் சேர்க்கையில் கடந்த ஆண்டை விட 10ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக இந்த ஆண்டு சேர்ந்துள்ளனர்.

அதேபோல் பிளஸ் 2 துணைத்தேர்வு முடிகள் தற்போது வெளியாகி உள்ளதால், நவ.18-ம் தேதி வரை முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடத்த அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்து. அத்துடன் எந்த கல்லூரிகளிலும் காலியிடம் இல்லாத வகையில் மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் " பிஎச்டி படிப்பு 20 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இந்த கல்வியாண்டில் துவங்கப்பட்டு உள்ளது. சென்னை மாநிலக் கல்லூரியில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு எம்.காம் முதுகலை படிப்பு தற்போது துவங்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும், " கடந்த அதிமுக அரசால் அறிவிக்கப்பட்டு கட்டபடாமல் விடப்பட்ட 13 கல்லூரிகளில் 8 கல்லூரிகளுக்கான கட்டிடப்பணி துவங்கப்பட்டு உள்ளது. அதேபோல் திமுக அரசு அறிவித்த 20 கல்லூரிகளில் 9 கல்லூரிக்களுக்கான கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

புதிய கல்லூரிகள் உருவாவதால் காலி இடங்கள் இருப்பதால் ,1895 காலியிடங்களுக்கான கௌரவ விரிவுரையாளர்கள் நேர்முகத் தேர்வு மூலம் உடனடியாக நியமிக்கப்பட உள்ளனர். பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்காக 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து தமிழக அரசு நாளை அனைத்து கட்சி கூட்டம் கூட்ட உள்ளது . திமுக சார்பில் மறுசீராய்வு செய்யப்பட உள்ளது. இப்போது நியமனம் செய்யும் பணிகளில் 10 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றபட மாட்டாது. ராகிங் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நவ.16- ம் தேதி அரசு கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in